என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

சமயபுரம்:

என்ஜினீயரிங் மாணவர்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தழுதாளப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேலு (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது மகன் நவீன்குமார் (17). இவர் முசிறியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். குடும்ப பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு நவீன்குமார், கல்லூரி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லால்குடி பகுதியில் வேலைக்கு சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இதை அறிந்த நவீன்குமாரின் பெற்றோர் 'முதலில் படிப்பில் கவனம் செலுத்து, பிறகு திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசிக்கொள்ளலாம்' என்று அறிவுரை கூறியதாக தெரிகிறது.

தற்கொலை

இந்நிலையில் தனது காதலுக்கு எழுந்த எதிர்ப்பால், தான் காதலித்த பெண்ணை கரம் பிடிக்க முடியாமல் போய்விடுமோ? என்ற மன விரக்தியில் இருந்த நவீன்குமார் நேற்று முன்தினம் இரவு தழுதாளப்பட்டி அய்யனார் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story