வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி - மற்றொருவர் படுகாயம்


வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி - மற்றொருவர் படுகாயம்
x

அடையாளம் தெரியாத வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் வசிப்பவர் லட்சுமணன். இவருடைய மகன் கோபிநாத் (வயது 20). இவர், தாழம்பூர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சையின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் சாலமன் (20). இவரும் அதே கல்லூரில் ஒரே பாடப்பிரிவில் படித்து வருகிறார். கோபிநாத், கிறிஸ்டோபர் சாலமன் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆந்திர மாநிலம் தடா அடுத்த வரதைப்பாளையம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று கல்லூரி மாணவர்கள் அனைவரும் தாம்பரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஆந்திராவை நோக்கி சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புறப்பட்டு சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை கோபிநாத் ஓட்ட கிறிஸ்டோபர் சாலமன் பின்னால் அமர்ந்திருந்தார். இவர்கள் காரனோடை பாலத்தின் வழியாக வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அதிவேகமாக வந்து இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் கோபிநாத், சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார். பின்னால் அமர்ந்து இருந்த கிறிஸ்டோபர் சாலமன் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போக்குவரத்து போலீசார், படுகாயம் அடைந்த கிறிஸ்டோபர் சாலமனை மீட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story