சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகள் நியமனம்


சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகள் நியமனம்
x

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை

ஆய்வுக்கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சென்னையில் மண்டல வாரியாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். பணி நிலையிலான கண்காணிப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதிகாரிகள் நியமனம்

கடந்த காலங்களில் பருவமழையின்போது அதிக அளவு மழைநீர் தேங்கிய திரு.வி.க. நகர் மண்டலம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் பணிகளை துரிதப்படுத்தும் விதமாக கூடுதல் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு மாநகராட்சி துணை கமிஷனர் விஷு மஹாஜன், கோடம்பாக்கம் மண்டலத்துக்கு மாநகராட்சி இணை கமிஷனர் சங்கர்லால் குமாவத் ஆகியோரும் கூடுதல் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகளாக மாநகராட்சியின் தலைமை என்ஜினீயர்கள் மற்றும் மேற்பார்வை என்ஜினீயர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story