பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஆங்கில வழிக்கல்வி
அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் ஆங்கில வழி கல்வி திட்டம் வழங்க கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் அரசு பள்ளி மாணவிகள் பெற்றோர்களுடன் வந்து மனு அளித்தனர்.
அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் ஆங்கில வழி கல்வி திட்டம் வழங்க கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் அரசு பள்ளி மாணவிகள் பெற்றோர்களுடன் வந்து மனு அளித்தனர்.
கலெக்டரிடம் கோரிக்கை
ராமநாதபுரம் அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் அவர்களின் பெற்றோர்களுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வள்ளல் பாரி நகராட்சி பள்ளிகளில் படித்து வந்தோம். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு ஆங்கில வழி கல்வி திட்டம் செயல்படுத்தியதால் அதில் சேர்ந்து படித்து வந்தோம். தற்போது நாங்கள் 10-ம் வகுப்பு முடித்துள்ள நிலையில் 11-ம் வகுப்பு செல்வதற்கு ஆங்கில வழிக்கல்வி திட்டம் இல்லை.
ஆங்கில வழி கல்வி
தமிழ்வழி கல்வி மட்டும்தான் உள்ளது. இதனால் நாங்கள் ஆங்கில வழிக்கல்வி வாயிலாக கல்வி கற்க முடியாத நிலை உள்ளது.
எங்களை போன்ற ஏழை எளிய மாணவிகளும் அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி கற்று நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகள் அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் தமிழ்வழி கல்வியிலோ அல்லது தனியார் பள்ளியில் ஆங்கில வழி கல்வியையோ தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே, எங்களின் நிலை கருதியும், வருங்கால மாணவிகளின் எதிர்காலம் கருதியும் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வள்ளல் பாரி நகராட்சி பள்ளியில் மேல்நிலைக்கல்வியை ஆங்கில வழியில் பயில வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது