ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி அதனை தொடங்கிவைத்தார்.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2 ஆயிரத்து 454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.
உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை வழங்கிடும் பொருட்டு ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் என 10 பேருக்கு ஓய்வூதியத்துக்கான காசோலைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை தொடங்கிவைத்தார்.
புத்தொழில் கொள்கை
தமிழ்நாட்டின் புத்தொழிலை மேம்படுத்தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023'-ஐ சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இதன்பின்பு தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் சென்னை, கோவை, திருப்பூர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 லட்சம் ரூபாய் பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பெண் தொழில் முனைவோர்
இந்த நிறுவனங்களில் 2 புத்தொழில் நிறுவனங்கள் பெண் தொழில் முனைவோர்களால் நடத்தப்படுவதாகவும், ஒரு புத்தொழில் நிறுவனம் பழங்குடியினரால் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் (பொறுப்பு) வி.அருண் ராய், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.