விளையாட்டில் ஏற்பட்ட முன்பகை: 12ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன்


விளையாட்டில் ஏற்பட்ட முன்பகை: 12ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன்
x
தினத்தந்தி 31 July 2023 3:06 PM IST (Updated: 31 July 2023 5:07 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் நடந்த பயங்கரம்! வாலிபால் விளையாட்டில் ஏற்பட்ட முன்பகை காரணமாக பள்ளி மாணவன் ஒருவர் கொலை செய்து உள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சாத்திரசன் கோட்டையில் அமைந்துள்ளது மல்லல் ஊராட்சி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 17). மல்லல் ஊராட்சி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

திருமுருகன் நண்பர்களுடன் சேர்ந்து சாத்திரசன் கோட்டையில் உள்ள மைதானத்தில் வாலிபால் விளையாடுவது வழக்கம். கடந்த மே மாதம் வழக்கம் போல் திருமுருகன் தனது நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது திருமுருகனுக்கும் ௧௧ம் வகுப்பு படிக்கும் அவரது உறவுக்கார பையனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த மாணவன் திருமுருகனை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமுருகன், அந்த மாணவனை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையில், கடந்த 26 ஆம் தேதியன்று திருமுருகன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மரக்குளம் பஸ் ஸ்டாப்பிறகு அருகே திருமுருகன் வந்து கொண்டிருந்தபோது, அவரை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு திருமுருகனின் தலையிலேயே வெட்டியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்

அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த திருமுருகனை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த திருமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், திருமுருகன் கொலை குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முன்விரோதம் காரணமாக திருமுருகனின் உறவுக்கார பையன் இந்த கொலையை செய்துள்ளது தெரிய வந்தது.

இந்த குற்ற செயலில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 7 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, முக்கிய குற்றவாளியான பள்ளி மாணவனையும் அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story