அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்கைகையை அதிகரிக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
ராணிபேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது தனிகைப்போளூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை கட்டும் பணியினை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பின்னர் அங்கு உள்ள ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் இருப்பை கணினி வாயிலாக ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களை எடை போட்டு சரிபார்த்தார்.
இதனையடுத்து தணிகைப்போளூர் பகுதியில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம வாரச் சந்தை கட்டுமான பணிகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிட கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது 13 மாணவர்கள் 13 மட்டுமே இருப்பதை அறிந்து நடப்பு கல்வியாண்டில் அதிக மாணவர்களை சேர்க்க பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு உத்தரவிட்டார்.
அப்போது அவர்களிடம் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதில் என்ன பயன் உள்ளது. அரசு உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறது. அதற்கு ஏற்றார் போல் கிராமத்து பிள்ளைகள் அரசு பள்ளியில் அதிகமாக சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
அதிகரிக்க வேண்டும்
தொடர்ந்து உளியம்பாக்கம் ஊராட்சியில் டேங்க் தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிட பணிகளையும் பார்வையிட்டார். மாணவர்கள் எண்ணிக்கையை ஆய்வு செய்து ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கட்டாயம் பள்ளி மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆசிரியர்கள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.
பின்னர் உளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்து பொருள்களின் இருப்ப சரியாக இருப்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பகுதியில் போடப்பட்டுள்ள சிமெண்டு சாலை, புதிய அங்கன்வாடி கட்டுமான பணிகளையும், பள்ளியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டுமான பணியை பார்வையிட்டார். அப்போது அங்கன்வாடி மையத்திற்கு தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர் லோகநாயகி, அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம், வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சுரேஷ் சவுந்தர்ராஜன், ஒன்றிய பொறியாளர் துரைபாபு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் தணிகை போளூர் வெங்கடேசன், உளியம்பாக்கம் ஜீவரத்தினம் மற்றும் அலுவலர்கள் பலர் இருந்தனர்.