இடபற்றாக்குறை காரணமாக நகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது
இடபற்றாக்குறை காரணமாக நகராட்சி பள்ளியில் மாணவர் சேர்ககை குறைந்தது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
பாதி நாள் வகுப்பு, இடபற்றாக்குறை காரணமாக நகராட்சி பள்ளியில் மாணவர் சேர்ககை குறைந்தது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பாதி நாள் வகுப்பு
பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு ராமகிருஷ்ணா நகரில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இதற்கிடையில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் இல்லை. இதனால் இடநெருக்கடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் பாடம் கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டை விட நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை குறைந்து உள்ளது. மேலும் பாதி நாள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படுவதால் மேலும் மாணவர் சேர்க்கை குறையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தனியார் பள்ளிக்கு நிகரான கல்வி
பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர் நகராட்சி பள்ளியில் கடந்த 2020-ம் ஆண்டு 520 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இதற்கிடையில் கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தினர். மேலும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியும் உள்ளது. மேலும் பள்ளி ஆண்டு விழாக்கள் தனியார் பள்ளிகளை போன்று தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்படுகிறது. இதற்கான செலவை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை 960 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் தனியார் பள்ளியில் இருந்து மட்டும் 400 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். இதற்கிடையில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளதால் இடபற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக 1 முதல் 4-ம் வகுப்பு வரை மதியம் வரையும், 4 முதல் 8-ம் வகுப்பு வரை மதியத்திற்கு பிறகும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கல்வி பாதிப்பு
பாதி நாள் மட்டும் வகுப்புகள் எடுப்பதால் பெற்றோர் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழ் வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு 110 பேர் வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். தற்போது 850 பேர் பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் 50 பேர் மாற்றுச்சான்றிதழை கேட்டு வருவதாக தெரிகிறது. 18 வகுப்பறைகளுக்கு 11 அறைகளே உள்ளன. போதிய வகுப்பறைகள் இல்லாததாலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.மாணவர் சேர்க்கை குறைவதை தடுக்கவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க கூடுதலாக வகுப்பறைகளை கட்டி கொடுக்க வேண்டும். மேலும் கூடுதலாக 5 ஆசிரியர்கள் வரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூடுதல் கட்டிடம்
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ராமகிருஷ்ணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பள்ளியில் இரு தளங்களுடன் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றனர்.