இளநிலை பட்டப்படிப்புகளில் மொழிப் பாடங்கள் கற்பிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ்


இளநிலை பட்டப்படிப்புகளில் மொழிப் பாடங்கள் கற்பிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
x

இளநிலை பட்டப்படிப்புகளில் 4 செமஸ்டர்களில் மொழிப் பாடங்கள் கற்பிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குள் மாற்றப்பட்ட 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தாள்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் மொழி அறிவையும், பண்பையும் வளர்ப்பதற்கான மொழிப்பாடங்கள் குறைக்கப்பட்டிருப்பது ஏற்க முடியாததாகும்.

மொழிப்பாடங்கள்தான் மாணவர்களை பண்பட்டவர்களாக மாற்றுகின்றன. பல்வேறு இனங்களின் கலாசாரங்கள், பண்பாடுகள், மொழிவளமை, சமூகநீதி உள்ளிட்டவை குறித்து மாணவ செல்வங்களுக்கு மொழிப்பாடங்கள்தான் விளக்குகின்றன.

அறம், ஒழுக்கநெறி, பெரியோரை மதித்தல், நட்பு ஆகியவை குறித்து திருக்குறள் படித்துதான் அறிந்துகொள்ள முடியுமே தவிர, கணினி அறிவியலையும், வணிகவியலையும் படித்து தெரிந்துகொள்ள முடியாது. மனிதர்களை மனிதத்தன்மையுடன் வைத்திருக்கவே மொழிப்பாடங்கள் கட்டாயமாகத் தேவைப்படுகின்றன.

இதை உணர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளிலும், 6 செமஸ்டர்களில் 4 செமஸ்டர்களிலாவது தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுவதை தமிழகஅரசு உறுதிசெய்யவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story