திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான அ.தி.மு.க, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் உடன்குடி உரக்கடை குணசேகரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற வேண்டி, எடப்பாடி பழனிசாமிக்கு திருச்செந்தூர் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் பொருளாளர் பழக்கடை திருப்பதி 4 அடி உயர ஐம்பொன் வேல் வழங்கினார்.
முன்னதாக திருச்செந்தூர் கோவில் விருந்தினர் மாளிகை முன்பாக எடப்பாடி பழனிசாமிக்கு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பொன்னாடை, பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவில் சண்முகவிலாச மண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி, கழக அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், என்.சின்னதுரை, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் பூந்தோட்டம் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மகாலிங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நகர செயலாளர் பி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.