முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையொட்டி கோவை விமான நிலையத்தில் இருந்து சித்ரா சந்திப்பு வரை தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் சாலையின் இருபுறத்திலும் திரண்டு நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர், வேனில் இருந்தபடி பொதுமக்களை பார்த்த கையை அசைத்தபடி சென்றார். அப்போது செண்டை மேளம், ஜமாப் அடித்து மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு சென்றார்
பின்னர் அவர் கோவை சாய்பாபாகாலனியில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் வீட்டுக்கு சென்று, அவரு டைய உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அங்கிருந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் ஈரோடு புறப்பட்டு சென்றார். ஈரோட்டில் நிகழ்ச்சியை முடித்த பிறகு அவர் இரவில் கரூர் செல்கிறார். இன்று (வெள்ளிக்கிழமை) கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெறும் விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பலத்த பாதுகாப்பு
பிற்பகலில் திண்டுக்கல் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பங்கேற் கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை சென்று, விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகையை தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி.க்கள் டேவிட்சன் தேவாசீர்வாதம், தாமரைக்கண்ணன் ஆகியோர் தலைமையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அமைச்சர்கள்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சு.முத்துச்சாமி, கலெக்டர் சமீரன், போலீஸ் ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டா முத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்.பி. ஏ.பி.நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






