அரியலூர் உட்பட காவிரி டெல்டா பகுதிகள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - டிடிவி தினகரன்


அரியலூர் உட்பட காவிரி டெல்டா பகுதிகள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - டிடிவி தினகரன்
x

அரியலூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிர்வாகம் சார்பாக 10 இடங்களில் அமைக்கவிருக்கும் எண்ணெய் கிணறுகளைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே தோண்டப்பட்டிருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரியலூர் மாவட்டத்தில் புதியதாக 10 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் முயற்சிப்பது இயற்கை வளங்களை முற்றிலுமாக அழிக்கும் முயற்சியாகும்.

கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதாவில் தொழிற்சாலைகளை காரணம் காட்டி அரியலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் விடுபட்ட காரணத்தினால் அப்பகுதிகளில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்துவதோடு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் முயற்சிகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் அரியலூர் உட்பட காவிரி டெல்டா பகுதிகள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



Next Story