தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடக்கம் தர்மபுரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்


தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற  விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடக்கம் தர்மபுரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 24 July 2023 7:30 PM GMT (Updated: 24 July 2023 7:31 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், "தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதி ஆண்டில் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சரால் திட்டம் தொடங்கிவைக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பங்கள் பதிவு முகாம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து சுயஉதவி குழு பெண்களிடம் அவர் கலந்துரையாடினார். பின்னர் பெண்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

அங்கிருந்து விழா மேடைக்கு முதல்-அமைச்சர் நடந்து வந்தார். அப்போது வழிநெடுகிலும் நின்றிருந்த பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மகளிர் சுயஉதவி குழுக்கள் திட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழ்நாடு முழுமைக்குமான திட்டமாக இருந்தாலும் நான் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தது எதற்காக என்றால் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு 1989-ம் ஆண்டு இதே தர்மபுரி மாவட்டத்தில் தான் மகளிர் சுயஉதவி குழுக்கள் என்னும் மாபெரும் திட்டத்தை அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி தொடங்கிவைத்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பெண்களிடையே தன்னம்பிக்கை, சுயமரியாதை உணர்வு ஆகியவற்றை வளர்த்து யாருடைய சார்பும் இல்லாமல் அவர்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு மகளிர் சுயஉதவி குழுக்கள் திட்டம் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களை உறுப்பினர்களாக கொண்டு தொடங்கப்பட்டது. அப்போது கலைஞர் விதைத்த விதை தழைத்து வளர்ந்து தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்து கொண்டிருக்கிறது.

ரூ.25 ஆயிரத்து 642 கோடி கடன்

தமிழ்நாட்டில் இப்போது 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 51 லட்சத்து 46 ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு 3 லட்சத்து 90 ஆயிரத்து 633 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.25 ஆயிரத்து 642 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நான் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்தேன்.

அப்போது பல்லாயிரக்கணக்கான மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கினேன். அந்த குழுக்களுக்கு கடன் உதவிகளை பல மணி நேரம் மேடையில் நின்று வழங்கினேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு நிகழ்ச்சிகளில் மகளிர் சுயஉதவி குழுக்களை பங்கேற்க வைத்தேன். அப்போது சுழல் நிதியுடன் கடன் வழங்கினேன். ஒரு நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 5 ஆயிரம் பேர் முதல் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர்.

விதை போட்ட தர்மபுரி மண்

அரசு நிகழ்ச்சி என்றால் நலத்திட்ட உதவிகளை 5 முதல் 6 பேருக்கு வழங்கிவிட்டு பின்னர் வீடு தேடி வரும் அல்லது அலுவலகத்திற்கு சென்று வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுவது முன்பு வழக்கமாக இருந்தது. அலுவலகத்திற்கோ, வீட்டிற்கோ சென்று நலத்திட்ட உதவிகளை பெறுவதில் சில சங்கடங்கள் உண்டு. எனவே அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மகளிர் குழுவை சேர்ந்த அனைவருக்கும் மேடையில் நேரடியாகவே நான் சுழல் நிதியை வழங்கினேன்.

அப்போது ஒரு சுவையான நிகழ்ச்சி நடந்தது. மகளிர் சுயஉதவி குழு சுழல் நிதி பெற மேடைக்கு வந்த வயது முதிர்ந்த தாய் ஒருவர், என் கையைப்பிடித்து நாங்கள் அமர்ந்திருந்து நலத்திட்ட உதவி பெறுகிறோம். ஆனால் 3 மணி நேரம் நின்று கொண்டே உதவிகளை வழங்குகிறீர்கள். உங்களுக்கு கால்கள் வலிக்காதா? இருக்கையில் உட்கார்ந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவியை வழங்குங்கள் என்று கூறினார்.

சுழல் நிதியை பெறும் உங்கள் முக மலர்ச்சியால் என் கால் வலி பறந்து விடுகிறது என்று அப்போது நான் கூறினேன். எந்த நோக்கத்திற்காக மகளிர் சுயஉதவி குழுக்களை கருணாநிதி உருவாக்கினாரோ அதன் பயன் முழுமையாக சென்று சேர வேண்டும் என்று செயல்படுத்திய இந்த திட்டம் கம்பீரமாக வளர்ந்து பெண்களுக்கு பயனளிக்கிறது. அதற்கு விதை போட்டது இந்த தர்மபுரி மண் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் முளைக்கும்

தர்மபுரி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 104 மகளிர் சுயஉதவி குழுக்கள் செயல்படுகின்றன. இவற்றில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 248 பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 625 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.751 கோடி கடன் வழங்கப்பட்டது. தர்மபுரியில் விதைத்த இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் முளைக்கும் என்பதால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் இங்கே தொடங்கப்படுகிறது.

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வகுத்து தந்த வழியில் தமிழ்நாடு மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மாநிலத்தை வளமை மிக்கதாகவும், வலிமை மிக்கதாகவும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற முன்னணி மாநிலமாக மாற்றவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாபெரும் அதிகார கொடை

இந்த வரிசையில் தான் இப்போது பெண்களின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய கலைஞர் பெயரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என்று 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் தந்தை பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். 60 ஆண்டுகள் கழித்து 1989-ம் ஆண்டு பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டத்தை கருணாநிதி நிறைவேற்றினார்.

இதுதான் திராவிட இயக்கம் பெண்களுக்கு அளித்த மாபெரும் அதிகார கொடை. இதன் அடுத்தகட்டமாக இல்லற பொறுப்பில் இருந்து குடும்பங்களின் உயர்வுக்கு பாடுபடும் பெண்களின் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தோம்.

பொய் பிரசாரம்

சமூக நீதி திட்டங்களில் மாபெரும் முன்னெடுப்பாக தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பெண்களில் யாருக்கெல்லாம் ரூ.1,000 அவசியம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இந்த மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும். இந்த திட்டத்திற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வெளிமாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பெரிய திட்டம் இதுவரை செயல்படுத்தப்பட்டதில்லை. இந்த மாபெரும் திட்டத்திற்கு அடுத்த நிதி ஆண்டில் ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டப்பயனாளிகளுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1,000 உரிமைத்தொகை வந்து சேரும். இதை யாரும் தடுக்க முடியாது. இதை அரசு தருவதாக கருத தேவையில்லை. இது மகளிருக்கான உரிமைத்தொகை.

இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது. பொய்யான வாக்குறுதியை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது என்று இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை விரும்பாத சிலர் பொய்யான வதந்திகளை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். இந்த திட்டத்தை முடக்க பொய் பிரசாரத்தை செய்து வருகிறார்கள். அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அறிவிக்கப்பட்ட திட்டத்தை நிறைவேற்றி தருவது எனது பணி. இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

தகுதி உடையோர் விடுபடக்கூடாது

பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து வறுமையை அறவே ஒழித்து பெண்கள் சுய மரியாதையுடன் வாழ வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது நிதி நிலைமை மோசமாக இருந்தது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பில் நாடு சிக்கி தவிக்கும் நிலை இருந்தது. அதனால் இந்த திட்டத்தை அப்போது நிறைவேற்ற முடியவில்லை. இப்போது ஓரளவு நிதி நிலைமை சரி செய்யப்பட்டு இருப்பதால் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பங்களை பதிவு செய்ய தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 925 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதேபோல் முகாம்களில் வழிநடத்த உதவி மைய தன்னார்வலர்களாக 35 ஆயிரத்து 925 பேர் பணியில் ஈடுபடுகிறார்கள். இன்று (நேற்று) முதல் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இதில் விடுபட்டவர்களுக்கு முகாம் முடிந்தபின் 2 நாட்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இந்த விண்ணப்பங்கள் பதிவு சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி வரை நடைபெறும். இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்ட பின் குடும்ப தலைவிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி உள்ள யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் மிக மிக கவனத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story