பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்; இல்லத்தரசிகள் கருத்து


பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்; இல்லத்தரசிகள் கருத்து
x

பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்; இல்லத்தரசிகள் கருத்து

ஈரோடு

அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி காஞ்சீபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு தலா ரூ.1,000 வீதம் வங்கிகள் மூலம் அனுப்பப்பட்டது.

இந்த உரிமை தொகைகளை பெற்ற இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களது கைகளில் உறுதியாக கிடைக்கப்போகிறது என்பதே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.

இவ்வாறு கிடைக்கும் பணத்தை பலர் உடனே செலவு செய்துவிட்டாலும் சிலர் வங்கிக்கணக்குகளில் இருப்பு வைத்து ஆனந்தப்படுகிறார்கள்.

இது மறைமுகமாக அவர்களிடம் ஒரு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

இதுகுறித்து கலைஞர் உரிமைத் தொகை பெறும் இல்லத்தரசிகள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

மிகுந்த உதவி

ஈரோடு கே.என்.கே. ரோடு பகுதியை சேர்ந்த ராதாமணி:-

எனக்கு வயது 70 ஆகிறது. எனது கணவர் நடராஜனும் நானும் தனியாக வசித்து வருகிறோம். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 பேரும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டனர். எனவே நாங்கள் குடும்பம் நடத்த சற்று சிரமமான நிலையில் இருந்தோம். இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எங்களைப்போன்ற ஆதரவற்றவர்களுக்கு அளித்து உள்ள ரூ.1,000 எங்களுக்கு மிகுந்த உதவியாக உள்ளது. 2 பேரும் நிம்மதியாக சாப்பிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த முறை அளித்த ரூ.1,000-ம் எங்களுக்கு செலவுக்கு சரியாகிவிட்டது. இனி வரும் காலங்களில் எங்கள் செலவுகளில் சிக்கனம் செய்து சேமிக்க முடியுமா என்று பார்ப்போம்.

சேமித்து வைப்பேன்

காந்திபுரம் மில்வீதியை சேர்ந்த லலிதா:-

நான் வீட்டு வேலைக்கு சென்று வருகிறேன். இதன் மூலம் ரூ.5 ஆயிரம் கிடைக்கிறது. அது வாடகை மற்றும் உணவுக்கு சரியாக போய்விடும். எனது மகள்களை திருமணம் செய்து கொடுத்து விட்டதால் நானும் எனது கணவர் ரங்கதுரையும் தனியாக வசிக்கிறோம். அவர் உடல்நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரால் வேலைக்கு செல்ல முடியாது. அவரது மருந்து செலவுக்கு மிகுந்த கஷ்டப்பட்டு வந்தோம். ரூ.1,000 வந்ததும் முதல் வேளையாக அவருக்கு மருந்து வாங்கிக்கொடுத்தேன். இப்போது அவரது உடல்நிலையும் தேறி வருகிறது. எனவே இனி மாதம்தோறும் அரசு தரும் பணத்தில் அவரது மருந்து தேவைபோக மீதியை சேமித்து வைக்க முடிவு செய்து இருக்கிறேன்.

ஊக்குவிப்பு

ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி தாரா:-

தமிழக அரசு எங்களுக்கு வழங்கியுள்ள இல்லத்தரசிக்களுக்கான கலைஞர் உரிமைத்தொகை இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது மேலும் வங்கிக்கு செல்லாத எங்களை வங்கிக்கு செல்ல வைத்துள்ளனர். மாதந்தோறும் ரூ.1,000 என்பது எங்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. இதனால் எங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பெரிய தொகை கிடைக்கும். அதன் மூலம் தேவையான நகைகளை கூட செய்து கொள்ள முடியும் என தெரிவித்தார்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வலிமை தரும்

ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.நரசிம்மன் கூறும்போது, 'தமிழக அரசு முதல் கட்டமாக அதிகபட்சமாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கி உள்ளது. எனவே அவர்களுக்கு இந்த தொகை பல்வேறு தேவைகளுக்கு பயன் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக ஏழை பெண்கள் கியாஸ் சிலிண்டர் மற்றும் மருந்து தேவைக்காக இந்த பணத்தை செலவு செய்கிறார்கள். எனவே அவர்களால் பணத்தை அப்படியே வங்கியில்போட்டு வைக்க முடியவில்லை. அதே நேரம் இனி வரும்காலங்களில் அவர்களின் தேவைபோக மீதி தொகை வங்கியில் இருப்பு இருக்கும்போது அது ஒரு சேமிப்பாக மாறும். அப்போது அது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக வலிமை தரும் என்பதில் சந்தேகமில்லை' என்றார்.

சேமிப்பை ஊக்குவிக்கும்

இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் சி.பி.கிருஷ்ணன் கூறும் போது, 'அடிப்படை தேவைக்கு மேல் இருப்பவர்கள்தான் சேமிக்கிறார்கள். தற்போது தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் அரசு செலுத்தும் தொகையை பெற 15-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை குறைந்தபட்சம் 200 பேருக்கு மேல் வங்கி கிளைகளுக்கு வந்து பணத்தை எடுத்துச்செல்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் பணத்தை எடுக்கின்றனர். 10 சதவீதம் பேர் பணத்தை சேமிக்கின்றனர். இதுப் படிப்படியாக மாறி, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.


Next Story