தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
ஆற்காடு வட்டாரத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை கலெக்டர் தொடங்கிவைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஆற்காடு வட்டாரத்தில் உள்ள 39 தொழில்சார் சமூக வல்லுனர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா ஆற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பயிற்சியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தொழில்சார் சமூக வல்லுனர்களுக்கு வழங்கப்படும் கையேட்டினை வெளியிட்டு, திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளை நன்கு கற்று அதனை ஊராட்சி அளவில் திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொழில்சார் சமூக வல்லுநர்களுக்கு தொழில் முனைவோரை அடையாளம் காணுதல், புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், வணிக திட்டங்கள் தயாரித்தல் மற்றும் பிற துறைகள் மூலம் வழங்கப்படும் தொழில் கடன் பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
விழாவில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் கங்காதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், செயல் அலுவலர்கள் ஜெயக்குமார், நித்தியானந்தம், வாசுதேவன், அன்பரசன், கீர்த்திகா, வட்டார பணியாளர்கள் மற்றும் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 39 தொழில்சார் சமூக வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.