விவசாயிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி


விவசாயிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி
x

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடலூர்

விருத்தாசலம்,

தொழில் முனைவோர் பயிற்சிகள்

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிற்சிகள் நடைபெறுகிறது. இப்பயிற்சிகள் உள்வளாக பயிற்சியாகவும், வெளிவளாக பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாக அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போது விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் குறித்து கற்று தரப்படும். மேலும் செயல்முறை விளக்கம், பயிற்சிகள் விளக்க உரை, பயிற்சி குறித்த கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) ஆதிவராகநல்லூரில் சிறுதானியங்களில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும், 8-ந் தேதி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தானிய வகை பயிரில் சாகுபடி தொழில்நுட்பங்கள் பயிற்சியும், 9-ந் தேதி டி.வி. புத்தூர் கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சியும், 10-ந் தேதி ஆலிச்சிக்குடியில் சிறுதானியத்தில் அங்கக மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

பயிர் மேலாண்மை பயிற்சி

மேலும் வருகிற 11-ந்தேதி விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயறு வகை பயிர்கள் சாகுபடி முறைகள் மற்றும் மதிப்பூட்டுதல் பயிற்சியும், 16-ந் தேதி விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தீவனப்புல் சாகுபடி பயிற்சியும், 16-ந் தேதி மணவாளநல்லூர் கிராமத்தில் சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சியும், 17-ந் தேதி கீழ்செருவாய் கிராமத்தில் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை பயிற்சியும், 18-ந்தேதி சேத்தியாத்தோப்பில் மண்வளம் மற்றும் மண் பரிசோதனை பயிற்சியும், 22-ந்தேதி அண்ணாகிராமத்தில் பண்ணை எந்திரங்கள் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாமும் நடக்கிறது.

கோழி வளர்ப்பு பயிற்சி

இதேபோல் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 23-ந்தேதி காய்கறி பயிரில் பூச்சி நோய் மேலாண்மை பயிற்சியும், 24-ந்தேதி காளான் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சியும், 29-ந் தேதி காட்டுமயிலூர் கிராமத்தில் கோழி வளர்ப்பு பயிற்சியும், 30-ந் தேதி ராமாபுரம் கிராமத்தில் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி காய்கறி சாகுபடி முறைகள் குறித்த பயிற்சியும், 31-ந் தேதி மங்களூர் கிராமத்தில் காட்டுப்பன்றி மேலாண்மை பயிற்சியும் நடக்கிறது.

இப்பயிற்சியின் இறுதியில் விவசாயிகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து, அவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். எனவே இந்த பயிற்சியில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story