குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி

7 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
7 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரங்கு நீர்வீழ்ச்சி
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வனப்பகுதியில் உருவாகும் நீரோடைகள் மற்றும் மழையின் மூலம் நீர்வரத்து உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதன் காரணமாக ஜனவரி மாதம் 13-ந்தேதி முதல் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நுழைவு வாயில் மூடப்பட்டு, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று முதல் அனுமதி
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மழைபொழிவு குறைந்ததால் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. இதன் காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த 7 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் சுற்றுலா பயணிகள் பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் செல்வதை தடுக்க ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். இதற்கிடையில் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.