சாலைகளில் எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு


சாலைகளில் எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
x

பஞ்சாயத்து பகுதிகளில் சாலைகளில் எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

பஞ்சாயத்து பகுதிகளில் சாலைகளில் எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பைகள்

சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சிவகாசி மாநகராட்சியும், 30-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களும் உள்ளது. இதில் சிவகாசி நகர பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்க மட்டும் 4 இடங்களில் குப்பை கிடங்குகள் அமைக்கப்பட்டு அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்காத குப்பைகள் சிமெண்டு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேநேரத்தில் திருத்தங்கல் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்க போதிய இட வசதி இல்லாததால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. மேலும் குப்பைகள் கொட்ட போதிய இடம் இல்லாததால் பல்வேறு இடங்களில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.

பஞ்சாயத்து பகுதிகள்

இதேபோல் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் 54 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளது. இந்த கிராமங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக்க போதிய இடவசதி இல்லை. இதனால் பல பஞ்சாயத்துக்களில் குப்பைகள் கொட்டபோதிய இடம் இல்லாமல் அந்த பகுதிகளிலேயே எரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில பஞ்சாயத்துக்களில் குப்பை தொட்டிகளிலேயே குப்பைகள் எரிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதை போல் குப்பைகளை தரம்பிரித்து அதில் உரம் தயாரிக்க ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். 5 பஞ்சாயத்துக்கு ஒரு இடத்தில் என இந்த குப்பை சேகரிக்கும் மையத்தை தொடங்கி அதில் இருந்து உரம் தயாரித்தால் பொது இடங்களில் குப்பைகள் எரிக்கப்படுவது தடுக்கப்படும். சிவகாசி யூனியனில் உள்ள பல பெரிய பஞ்சாயத்துக்களில் தற்போது குப்பைகளை சேகரிக்க போதிய ஆட்கள் இல்லாத நிலையும் இருக்கிறது.

இதை தவிர்க்க பஞ்சாயத்து நிர்வாகம் புதிய துப்புரவு தொழிலாளர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். குப்பைகள் பொது இடங்களில் எரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story