குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காட்டுப்புத்தூர்:
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேல காரைக்காடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை என்று தெரிகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தங்கள் பகுதிக்கு குடிநீர் கேட்டும் மேலக்காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையா, தொட்டியம் ஒன்றியக்குழு தலைவர்(பொறுப்பு) பாபு என்ற சத்தியமூர்த்தி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தங்கள் கிராமத்திற்கு போதுமான குடிநீரை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தொட்டியம்-காட்டுப்புத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்டதாக 5-க்கும் மேற்பட்டவர்கள் மீது காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.