பெண் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம்


பெண் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம்
x
தினத்தந்தி 7 Jun 2022 2:55 PM GMT (Updated: 7 Jun 2022 2:57 PM GMT)

பெண்களுக்கு சமவேலை, சமஊதியம் வழங்கவேண்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த உழைக்கும் பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்

இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் உழைக்கும் பெண்கள் மாநில மாநாடு, திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் மாலதி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநில கன்வீனர் லூர்துரூபி வேலை அறிக்கை வாசித்தார்.

இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சம்மேளனத்தின் சிறப்பு தலைவர் சிங்காரவேலு, மாநில தலைவர் பெருமாள், சி.ஐ.டி.யூ. உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாநில கன்வீனர் தனலட்சுமி, சி.ஐ.டி.யூ. மாநில துணை தலைவர் கே.ஆர்.கணேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் நிர்வாகிகள், கட்டுமான பெண் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பெண் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும் மழைக்காலங்களில் வேலை செய்ய முடியாததால் நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் பணியிடத்தில் பெண்களுக்கு கழிப்பிட வசதி செய்துதர வேண்டும். நலவாரியத்தின் மூலம் அரசு அறிவித்த வீட்டு வசதி திட்டம், நலவாரிய ஆன்லைன் பதிவுகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story