இறையூர் அய்யனார் கோவிலில் சமத்துவ பொங்கல்


இறையூர் அய்யனார் கோவிலில்  சமத்துவ பொங்கல்
x

அன்னவாசல் அருகே இறையூர் அய்யனார் கோவிலில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில், 3 சமூகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை

நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம ஆசாமிகள் சிலர் அசுத்தம் செய்த விவகாரம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் அரசு அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு நேரிடையாக சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அங்குள்ள அய்யனார் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆதிதிராவிட மக்களை அழைத்து கோவிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், இரட்டை குவளை முறையை பின்பற்றிய டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து, இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சமுதாய மக்களிடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க இலுப்பூர் ஆர்.டி.ஓ. தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டு இருந்தால் இனி அவ்வாறு செயல்படுத்தக்கூடாது. அதேபோல் அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் 3 சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபாடு நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதில் 3 சமுதாய மக்களும் ஒப்புதல் தெரிவித்து கையொப்பமிட்டனர்.

இதனைதொடர்ந்து இறையூர் அய்யனார் கோவிலில் 3 சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபாடு நடத்தும் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று நடைபெற்றது.

சமத்துவ பொங்கல்

இதையொட்டி கோவில் நுழைவு வாயிலில் வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டன. மேலும், மேளதாளங்கள் முழங்க காலை முதல் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது. பின்னர் பட்டியலின மக்களை வருவாய் துறையினரும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தட்டு தாம்பூலத்துடன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 3 சமுதாய மக்களும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஆதிதிராவிட மக்கள் கூறுகையில், பல தலைமுறைகளாக கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.

புதிய குடிநீர் தொட்டி

இதையடுத்து, அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அசுத்தம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டிக்கு பதிலாக அப்பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 20 நாட்களில் பணி முடிக்கப்பட்டு மீண்டும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறாமல் இருக்க மனிதர்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் மனிதாபிமான அடிப்படையில் மற்றவர்களை மதிக்க கூடிய வகையில் மாறினால் இது போன்ற நிகழ்வு எப்போதும் அரங்கேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story