கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்


கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
x

ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவிகள் சமத்துவ ெபாங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவிகள் சமத்துவ ெபாங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மனநல காப்பகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பொங்கல் விழாவை அரசின் வழிகாட்டுதலின்படி சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் அருகே உள்ள செஞ்சோலை மனநல காப்பகத்தில் ஏராளமான மனநோயாளிகள் பராமரிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை மனநல காப்பகத்தில் மனநோயாளிகள் முன்னிலையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பொங்கல் பொங்கி வந்த நேரம் மனநோயாளிகள் பொங்கலோ பொங்கல் என்று கூறியது மனம் உருக செய்தது. மனநலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொங்கல், கரும்பு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மனநல காப்பக நிர்வாகிகள் மற்றும் பராமரிப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அரசு மகளிர் கலைக்கல்லூரி

இதேபோல ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் தமிழர்களின் பாரம்பரிய சேலை அணிந்து மஞ்சள் சுற்றிய புதிய பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வரும்போது மாணவிகள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டனர். ஒன்று கூடி வைத்த பொங்கலுடன் கரும்பு, பனங்கிழங்கு ஆகியவற்றை படைத்து சூரிய பகவானுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவித்து வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள் பாட்டு பாடி ஒயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி மகிழ்ச்சியை கொண்டாடினர்.

அரசு செவிலியர் பயிற்சி பள்ளி

ராமநாதபுரம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் அனைவரும் சேலை கட்டி மஞ்சள் கட்டிய புதிய பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு மகிழ்ந்தனர்.

விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவிகள் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், உறியடித்தல் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். உறியடி நிகழ்ச்சியில் மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியர்கள், பணியாளர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு உறியடித்தது காண்பவரை கவர்ந்தது. விழாவில் மாணவிகள் அனைவரும் தங்களின் ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு நிர்வாகிகள் மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story