6,675 கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
கிருஷ்ணகிரியில் 6,675 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1.28 கோடியில் பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் 6,675 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1.28 கோடியில் பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.
பாதுகாப்பு உபகரணங்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், மதியழகன், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் தொழிலாளர் இணை இயக்குனர் ரமேஷ் வரவேற்றார்.
இந்த விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நலவாரியத்தில் பதிவு பெற்ற 6,675 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-
வீட்டுமனைகள் வழங்கும் திட்டம்
கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் இதுவரை 18,694 பயனாளிகளுக்கு ரூ.9.75 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன மேலும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் ஆண்டுக்கு 10,000 வீட்டுமனைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பதிவு செய்த நாள் மற்றும் 3 ஆண்டு தொடர் புதுப்பித்தல் அடிப்படையில் வீட்டுவசதி வழங்கும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நலவாரியத்தில் 2,09,248 பேர் பதிவு செய்துள்ளனர். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 6,675 பேருக்கு ரூ.1,28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் ஜெய்சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.