மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்


மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:46 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.19 லட்சத்தில் உதவி உபகரணங்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

சிவகங்கை

தேவகோட்டை,

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.19 லட்சத்தில் உதவி உபகரணங்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

மருத்துவ முகாம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தேவகோட்டை யூனியன் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற இரண்டரை ஆண்டுகளில் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி வருகிறது. அந்தந்த துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலமாக இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.

எண்ணற்ற திட்டங்கள்

தற்போது கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த முகாம் மாவட்டத்தில் 2-வது சிறப்பு மருத்துவ முகாமாக மாவட்ட அளவில் நடைபெற்றுள்ளது.

முதல்-அமைச்சர் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார். அந்த வகையில் அவர்களுக்காக நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெற்று, தான் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் தங்களை சார்ந்தோர்களுக்கும் இம்முகாம் குறித்து எடுத்துரைத்து அவர்களையும் நலம் பெற செய்ய வேண்டும் என கூறினார்.

உபகரணங்கள்

தொடர்ந்து 37 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.19 லட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி ஆகியவைகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story