65 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்
65 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை அண்ணாதுரை எம்.பி. வழங்கினார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் விழா திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி. நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. கலந்து கொண்டு 65 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ''திருவண்ணாமலை தொகுதியில் மூத்த குடிமக்களுக்கு ஒரு திட்டத்தை செயல்படுத்த அனுமதி பெற்றிருக்கிறோம். அந்த திட்டத்தை ஒன்றிய அளவிலும் முகாம் நடத்தி பயனாளிகளை தேர்வு செய்து, தென்னிந்தியாவில் முதலிடம் இல்லாமல், இந்திய அளவில் முதன்மை தொகுதியாக வருவதற்காக செயல்படுத்த இருக்கிறோம்'' என்றார்.
கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசுகையில், ''மாவட்டத்தில் மொத்தம் 14024 மாற்றுத்திறனாளி மக்கள் உள்ளனர். வாரந்தோறும் நடைபெறும் மக்கள்குறை தீர்வு நாள் கூட்டத்தில் 82 மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்கள் அளித்துள்ளனர். ஜனவரி மாதம் இறுதிக்குள் வீட்டுமனை பட்டா தரப்படும்'' என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதா, ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயா, திருமதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.