எறிபத்த நாயனார் பூக்கூடை விழா கோலாகலம்


எறிபத்த நாயனார் பூக்கூடை விழா கோலாகலம்
x

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்கூடை விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

எறிபத்த நாயனார் பூக்கூடை விழா

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் எறிபத்த நாயனார் பூக்கூடை விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் நேற்று எறிபத்த நாயனார் பூக்கூடை விழா நடைபெற்றது. கோவிலில் எறிபத்த நாயனார் புகழ் சோழ நாயனார்-சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.பின்னர் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு விழாவுக்கான பந்தலுக்கு யானை வாகனம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அப்போது, கரூர் டவுன் போலீஸ் நிலையம் அருகே நந்தவனத்தில் பூப்பறித்துக் கொண்டு சிவகாமி ஆண்டார் நடந்து வருவது போலவும், அப்போது மதம் பிடித்து ஓடிய யானை பூக்கூடைைய தட்டி விட்டவுடன் வேல் கம்பு உள்ளிட்டவற்றுடன் அந்த யானையை சிவ பக்தர்கள் துரத்தி வருவது போலவும், பின்னர் விழா மேடையில் வைத்து மழு என்னும் ஆயுதத்தால் எறிபத்த நாயனார் யானையின் தும்பிக்கையை வெட்டுவதுடன் அது கீழே சாயும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

பின்னர் புகழ்சோழ மன்னர் வேடமணிந்த ஒருவர் தான் வைத்திருந்த வாளால் தன்னை வெட்டும்படிகேட்டுக் கொள்ளவும், அப்போது பசு வாகனத்தில் அலங்கா வள்ளியுடன் காட்சியளித்த பசுபதீஸ்வரர் இறந்த யானையை உயிர்த்தெழ செய்து பூ மாலை பொழிந்து ஆசீர்வாதம் செய்தார். அப்போது அங்கிருந்து பக்தர்கள் தாங்கள் வைத்திருந்த பூக்களை தூவி வழிபட்டனர். மேலும் சிவ கோஷங்களையும் எழுப்பினர்.அதனைத் தொடர்ந்து பூக்கூடைகள் புடை சூழ சிவகாமி ஆண்டார் முன்னே செல்ல அதற்கு பின்னால் பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி புகழ் சோழ மன்னருடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திரளான பக்தர்கள்

திரளான பக்தர்கள் பூக்கூடையை கையில் குச்சியால் சுமந்தபடி சென்றதை காண முடிந்தது. பக்தர்களுக்கு வசதியாக கோவில் சார்பில் பூக்கூடைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு இருந்தது. அதனை ஏந்தி சென்றனர். ஊர்வலம் மேள, தாளம் முழங்க நடைபெற்றது. சிவ பக்தர்கள் பலர் நடனமாடிய காட்சிகளையும் காணமுடிந்தது.ஊர்வலமானது நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த பூக்கூடையில் பக்தர்கள் தங்களது கஷ்டங்கள் தீர பூக்களை சாற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story