கோவை அருகே எரிசாராய லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு
கோவை அருகே எரிசாராயம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை,
ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு எரி சாராயம் ஏற்றிக்கொண்டு 4 லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்த லாரிகள் இன்று காலை 6.30 மணி அளவில் கோவை பாலக்காடு ரோட்டில் எட்டிமடை அருகே சென்றன. ஒன்றன் பின் ஒன்றாக லாரிகள் சென்றபோது திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு லாரி கவிழ்ந்தது. மற்றொரு லாரிக்கு லேசான சேதம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர்கள் எரி சாராயம் தீ பற்றி விடுமோ என்ற அச்சத்தில் இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ பிடிக்காமல் இருக்க தண்ணீரை ஊற்றி முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் ராட்சத கிரேன் மூலமாக கவிழ்ந்த லாரி தூக்கி நிறுத்தப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . விபத்து காலை நேரம் ஏற்பட்டதால் வெயிலினால் எரிசாராயம் எரியாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.