ஈரோடு கருங்கல்பாளையத்தில் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய முடிவு அமைச்சர் முத்துசாமி ஆய்வு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் காந்தி சிலையை அமைச்சா் முத்துசாமி ஆய்வு செய்தாா். அப்போது அவா் சிலையை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினாா்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் காந்தி சிலையை இடமாற்றம் செய்வது குறித்து அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
சாலை விரிவாக்க பணி
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அதன்படி கருங்கல்பாளையம் காவிரிரோடு விரிவாக்கம் செய்யும் பணி ரூ.11 கோடியே 30 லட்சம் செலவில் நடக்கிறது. இதற்காக சாலையோரமாக மழைநீர் வடிகால் கட்டப்பட்டு, நடைபாதையும் அமைக்கப்படுகிறது. காவிரி ரோட்டில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவர் சுமார் 10 மீட்டர் தூரம் இடிக்கப்பட்டு, அங்குள்ள நுழைவு வாயிலும் இடிக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிய நுழைவு வாயில் கட்டப்பட்டது.
அமைச்சர் ஆய்வு
இந்தநிலையில் கருங்கல்பாளையம் காந்திசிலை உள்ள இடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் அந்த சிலையை சிறிது தூரம் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். சிலையை பாதுகாப்புடன் இடமாற்றம் செய்வது குறித்தும், அங்கு மக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை வழங்கினர். மேலும், நூலகம் அமைப்பதற்கான இடவசதி குறித்தும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்பட பலர் உடனிருந்தனர்.