ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு: அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை


ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு: அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
x

ஈரோடு இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் ஆலோசனை நடத்தினார்.

சேலம்,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாலை 4.45 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர்கள்

கூட்டத்தில் தம்பிதுரை எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், காமராஜ், கே.பி.அன்பழகன், பென்ஜமின், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், வளர்மதி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, கே.சி.சம்பத், இசக்கி சுப்பையா மற்றும் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், மணி எம்.எல்.ஏ. உள்பட உயர்மட்ட குழு நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்தும், தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.


Next Story