ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் யார்? தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தகவல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் தமிழ்நாடு அரசியல் களத்தில் அனலை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் அமைதியாக மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டு, வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தேர்தல் பணிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் மறுபக்கம் எதிர்க்கட்சியான அதிமுகவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால், உட்கட்சி பூசல் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக2வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவில் கூடுதலாக மேலும் 6 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்து ஈபிஎஸ் அறிவித்துள்ளார்.
இந்தசூழ்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்? எதிர்பார்க்கும் நிலையில்.
முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, அதிமுக மாணவரணி செயலாளர் நந்தகோபால், அதிமுக பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. தென்னரசு, ராமலிங்கம், நந்தகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை களமிறக்க பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய ஆலோசனைக்குப் பின் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளும் பழனிசாமி உடனான ஆலோசனையில் பங்கேற்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பனிசாமி தரப்பு வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏவும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான தென்னரசு போட்டியிட அதிக வாய்ப்பு என கூறப்படுகிறது.