ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். அவர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்து உள்ளனர். இதற்கிடையே இரட்டை சிலை சின்னம் முடக்கப்படுமா? என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தீவிர ஆலோசனை
இத்தகைய பரபரப்பான தேர்தல் களத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் தீவிர ஆலோசனையில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு உள்ளார். அவர் நேற்று ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, பாலகிருஷ்ணன் உள்பட கட்சியினர் பலரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றார்கள்.
இன்று அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வின் பலம், கடந்த 1½ ஆண்டுகளில் தி.மு.க. நிறைவேற்றிய திட்டங்கள், செயல்படுத்தப்படாத திட்டங்கள் ஆகியன குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு நிகராக அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதால், அந்த தொகுதியில் மக்கள் செல்வாக்கு உள்ள நபரை தேர்வு செய்ய கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.
நேற்று காலையில் தொடங்கிய கூட்டம் மாலை வரை நடைபெற்றது. இன்றும் (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது. அதன்பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எஸ்.தென்னரசுக்கு வாய்ப்பு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏற்கனவே இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட பணிக்குழுவில் கே.வி.ராமலிங்கம் பெயர் இடம் பெற்றது. எனவே அவர் போட்டியிடவில்லை என்று தெரியவருகிறது. ஏற்கனவே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த கே.எஸ்.தென்னரசு மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவரது பெயர் பணிக்குழுவிலும் இடம்பெறவில்லை. அதுமட்டுமின்றி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளர் பெரியார்நகர் மனோகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால் உள்ளிட்டோரும் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்து உள்ளார்கள்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிகராக களத்தில் போட்டி கொடுக்கும் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் அக்கட்சி தலைமை உள்ளது.