ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டம்...!


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டம்...!
x

எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு சட்டச்சபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ந்தேதி நடைபெறுவதாக அறிவித்து உள்ளது.

இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட த.மா.கா. விருப்பம் தெரிவித்து உள்ளது.

ஆனால் அ.தி.மு.க.வினர் இந்த தொகுதியில் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். அ.தி.மு.க. தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருந்து வரும் நிலையில் அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோரில் ஒருவருக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய 6 மாத காலத்தில் 1973-ல் திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆரின் வழியை பின்பற்றி 1989-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர் ஆவார்.

எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் துணிச்சலாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்வார் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story