ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அண்ணாமலை போட்டியிட்டு பா.ஜ.க. பலத்தை நிரூபிக்க வேண்டும்;கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டு பா.ஜ.க. பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினாா்.
காலிங்கராயன் தினத்தையொட்டி வெள்ளோட்டில் உள்ள அவருடைய சிலைக்கு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாக கூறி வருகிறார்கள். எந்த அளவுக்கு பாரதீய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது என்பதை நிரூபிக்க அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும்.
தி.மு.க. கூட்டணி கட்சி வலுவாக உள்ளது. தி.மு.க.வை பொறுத்த வகையில் கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுக்கும் கட்சி. அதனால் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். தி.மு.க. கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களது வெற்றிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும். அ.தி.மு.க.வில் தற்போது நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஒரு முடிவு இல்லாமல் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, பொருளாளர் கே.கே.சி.பாலு, மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தலைவர் மலைச்சாமி, நிர்வாகிகள் குமரவேல், ராஜசேகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.