ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம்


ஈரோடு கோட்டை  பெருமாள் கோவில் தேரோட்டம்
x

ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஈரோடு

ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேர்த்திருவிழா

ஈரோடு கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி இரவு கிராமசாந்தி பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் காலையில் யாகசாலை பூஜையும், திருமஞ்சனமும் நடந்தது.

இரவில் அன்னபறவை வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருடசேவை, யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதிஉலா சென்றார். நேற்று முன்தினம் இரவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தி கோஷம்

இந்த நிலையில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கஸ்தூரி அரங்கநாதர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, கோவிலின் செயல் அதிகாரிகள் கயல்விழி, சுகுமார் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

கோவிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் வீதி வழியாக சென்று மாலையில் நிலை வந்தடைந்தது. இதில் பக்தர்கள் பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தார்கள். அப்போது தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா" என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

தெப்ப உற்சவம்

இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு யாகசாலை பூஜையும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா செல்கிறார். நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவிலின் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்படுகிறது.


Next Story