மேம்பாலம் கட்டியும் போக்குவரத்து நெரிசல் குறையாத ஈரோடு மாநகரம்வாகன ஓட்டிகளின் சிரமத்துக்கு தீர்வு ஏற்படுமா?

மேம்பாலம் கட்டியும் போக்குவரத்து நெரிசல் குறையாத ஈரோடு மாநகரத்தில் வாகன ஓட்டிகளின் சிரமத்துக்கு தீர்வு ஏற்படுமா? என்ற கோாிக்கை உருவாகி உள்ளது
ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுவட்டச்சாலை, சாலை விரிவாக்கம் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் சற்றும் குறைந்தபாடில்லை.
மேம்பாலம்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பெருந்துறை ரோட்டில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்லும் ரோட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் ஏற்படும் நெரிசல் குறையும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் பெருந்துறை ரோட்டில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்பவர்கள் மட்டுமே இந்த பாலத்தில் பயணம் செய்ய முடியும் என்ற நிலையே உள்ளது. பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் இருந்து ஈ.வி.என். ரோடு பகுதி செல்லும் வகையில் பாலம் உள்ளது. அதே நேரம் பெருந்துறை ரோட்டில் இருந்து ஈ.வி.என். ரோட்டுக்கு மேம்பாலம் வழியாக செல்வது சிரமம் என்பதால் தரைவழி சாலையிலேயே அனைத்து வாகனங்களும் செல்கின்றன.
இதனால் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் நெரிசல் சிறிதும் குறையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேம்பாலம் கட்டப்பட்டும் போக்குவரத்து நெரிசல் குறையாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் பெரும்பாலானவர்கள் இந்த பாலத்தை பயன்படுத்துவதில்லை என்பதுதான். ஏன் என்றால் ஈரோடு பஸ் நிலையம் செல்லும் மேட்டூர் ரோடு பகுதியில் மேம்பாலம் இல்லாததே இதற்கு காரணம்.
இதுபற்றி ஈரோடு பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
மிக தவறு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல்:-
ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கு மேம்பாலங்கள் மிகவும் அவசியம். ஆனால் இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் மேம்பாலம் போக்குவரத்தை எளிமைப்படுத்துவதாக இல்லை. இந்த பாலத்தை கட்ட திட்டமிட்டபோதே மிகப்பெரிய பாலமாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தோம். இறுதியாக பாலம் கட்டும்போது மேட்டூர் ரோட்டில் மேம்பாலம் அமைவதாக இருந்தது. ஆனால் அதைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. தற்போதைய மேம்பாலம் கட்டப்பட்டு இருக்கும் வடிவம் மிக மிக தவறு. இதை சரி செய்ய வேண்டும் என்பதுதான் ஈரோடு மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த மேம்பாலம் 4 எல்லைகளையும் இணைப்பதாக அமைய வேண்டும். மேட்டூர் ரோட்டில் மேம்பாலம் பஸ் நிலையம், சுவஸ்திக் கார்னர் வரையும், பெருந்துறை ரோட்டில் திண்டல் வரையும், பன்னீர் செல்வம் பூங்கா கடந்து மணிக்கூண்டு வரையும், ஈ.வி.என்.ரோட்டில் ரெயில் நிலையம் வரையும் இந்த பாலம் நீட்டிக்கப்பட வேண்டும். உதாரணமாக அருகில் உள்ள நகரமான பள்ளிபாளையம்-திருச்செங்கோடு மேம்பாலம் நகர பகுதிகளுக்குள் கனரக வாகனங்கள் வராத வகையில் அமைக்கப்படுகிறது. அதுபோன்று ஈரோடு நகருக்குள் கனரக வாகனங்கள் வராத வகையில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும்.
நீட்டிக்கப்பட வேண்டும்
முன்னாள் கவுன்சிலர் ராமு என்கிற பொ.ராமச்சந்திரன்:-
ஈரோட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதற்கு மேம்பாலங்கள் அத்தியாவசிய தேவையாக உள்ளது. ஈரோட்டை பொறுத்தவரை சிறிய நகரம்தான். எனவே நகரின் மிக முக்கிய சாலைகளை மேம்பாலங்கள் மூலம் இணைப்பது மிக அவசியமாகும். முதலில் தற்போதைய மேம்பாலம் திட்டமிட்டபடி மேட்டூர் ரோட்டில் பாலம் அமைக்க வேண்டும். இதற்காக எந்த பாரபட்சமும் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகரின் வளர்ச்சிக்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஈ.வி.என். ரோட்டில் மேம்பாலம் ரெயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். மேட்டூர் ரோடு வழியாக வீரப்பன்சத்திரம் வரை பாலம் அமைக்க வேண்டும். பன்னீர்செல்வம் பூங்கா வழியாக கருங்கல்பாளையம் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
காளைமாடு சிலை சந்திப்பில் இருந்து நாடார் மேடு வரை மேம்பாலம் அமைக்கப்பட்டால் ஈரோட்டின் போக்குவரத்து நெரிசல் குறையும். அதுமட்டுமின்றி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பெயரில் சாலையோரத்தில் கட்டப்பட்டு வரும் நடைபாதைகள், இன்னும் ஆக்கிரமிப்பை ஊக்கப்படுத்துவதாக கட்டப்படுகின்றன. எனவே இந்த நகரின் தேவை என்ன என்பதை பார்த்து அதற்கு ஏற்ப ஸ்மார்ட் திட்ட பணிகள் செய்யப்பட வேண்டும். நகர் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
விரிவாக்கம்
முனிசிபல் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் புஸ்பராஜ்:-
நான் 35 ஆண்டுகளாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். இங்கு மேம்பாலம் கட்டிய பிறகுதான் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது. இந்த மேம்பாலத்தை பன்னீர் செல்வம் பூங்கா வரை, சென்னிமலை ரோடு வரை, சுவஸ்திக் கார்னர் வரை என்று 3 பக்கங்களும் நீட்டித்து இருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும். இப்போது வெறுமனே வாகன நிறுத்தம் செய்ய ஒரு பெரிய அளவிலான நிழற்குடையாக இந்த பாலம் அமைந்து இருக்கிறது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு பஸ்சில் செல்பவர்கள் பாதுகாப்பாக 2 சக்கர வாகனங்கள் நிறுத்தவும், வாடகை கார்கள், கால் டாக்சிகள் நிறுத்தவும், மழை-வெயிலுக்கு மக்கள் ஒதுங்கவும் பயன்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் என்றால் மேம்பாலம் விரிவாக்கம் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும்.
வாகன நிறுத்தம் இடம்
எல்.வி.ஆர்.காலனி பகுதியை சேர்ந்த நா.தேவி:-
ஈரோடு நகரப்பகுதிக்குள் செல்லவேண்டும் என்றால் பயமாக உள்ளது. ஏன் என்றால் அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல். அவசரமாக வெளியூர்களுக்கு செல்லவேண்டும் என்றால் 2 மணி நேரத்துக்கு முன்பாக செல்லவேண்டி உள்ளது. இதற்கு காரணம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தாது தான் காரணம்.
மேலும் இந்த பாலத்தை மணல் மேடு, பஸ்நிலையம், திண்டல் வரை விரிவுப்படுத்தப்பட்டால் ரெயில் நிலையத்தில் இருந்து பாலம் வழியாக பஸ் நிலையத்துக்கு பஸ்கள் மற்றும் வாகனங்கள் வந்து விடும். திண்டல் வரையும் வாகனங்கள் சென்று விடும். இப்படி செய்தால் பாலத்தின் கீழ் நடந்து செல்லுபவர்கள், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் எளிதாக செல்லமுடியும். நேரமும் மிச்சமாகும். விபத்துகளும் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது பாலத்தின் கீழ் பகுதி வாகனங்கள் நிறுத்தும் இடமாகத்தான் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கேள்விக்குறி
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க எத்தனை விதமான ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஒரு மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்ட பிறகு, அதை முழுமைப்படுத்த முடியாத நிலையும், தற்போதைய மேம்பாலத்தில் மேட்டூர் ரோடு விரிவாக்கமும் இதுபோலவே சிக்கலுக்குள் இருப்பதாகவே தெரிவிக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் வாகன ஓட்டிகளின் சிரமத்துக்கும், பொதுமக்களின் அவதிக்கும் யார் தான்? தீர்வு காணுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.






