ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் - நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு கருங்கல்பாளையத்தையும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக காவிரி ஆற்று மேம்பாலம் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் மேம்பாலத்தின் மீது ஓரமாக நின்று காவிாி ஆற்றின் அழகை ரசித்து பார்ப்பவர்களும் உண்டு. இந்தநிலையில் மேம்பாலத்தில் இருந்தபடி 2 பேர் இறைச்சி கழிவுகளை காவிரி ஆற்றில் கொட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. சரக்கு ஆட்டோவில் மூட்டை, மூட்டையாக இறைச்சி கழிவுகளை கொண்டு வந்த 2 பேர் ஆற்றில் ஓடும் தண்ணீரில் கழிவுகளை கொட்டினர். இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தொிவித்து உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "காவிரி ஆற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுவது மிகவும் ஆபத்தானது. பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீா் ஆதாரமாக காவிரி ஆறு உள்ளது. ஏற்கனவே கழிவுநீர், சாயக்கழிவு கலப்பதை தடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பள்ளிபாளையம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வந்து அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசடைய வாய்ப்பு உள்ளது. இதைத்தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றனர்.