ஈரோடு மாநகர் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ஈரோடு மாநகர் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாநகராட்சி சார்பில், கொசு ஒழிப்பு பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று, குடிநீர் தொட்டிகளில் மருந்து தெளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, 'கொசு ஒழிப்பு பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மழைகாலத்தில் கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளை சுற்றியுள்ள திறந்தவெளி பகுதிகளில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் சேமித்து வைக்ககூடிய தொட்டிகள், டிரம்கள், டேங்குகள் ஆகியவற்றில் கொசு புகாத வகையில் மூடி வைக்கவேண்டும்.
வாரம் ஒருமுறை நீர் உள்ள தொட்டிகளில் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி பிளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். குளிர்சாதன பெட்டியில் பின்புறம் உள்ள நீரையும் அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும். உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டீ கப்புகள், இரும்பு பொருட்கள், பழைய டயர்கள், பானைகள், தொட்டிகள், ஆட்டு உரல்கள், தேங்காய் தொட்டிகள், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். குடிநீர் குழாய்களுக்கு அருகில் உள்ள குழிகளில் தேங்கும் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளதால் அவற்றை கண்டறிந்து தண்ணீர் தேங்காதவாறு சரிசெய்யவேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்' என்றனர்.