ஈரோடு ஆசிரியை படுகொலை: குடும்ப உறுப்பினர்களிடம் ரகசிய தகவல் பெறப்பட்டுள்ளது- கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பேட்டி


ஈரோடு ஆசிரியை படுகொலை: குடும்ப உறுப்பினர்களிடம் ரகசிய தகவல் பெறப்பட்டுள்ளது- கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பேட்டி
x

ஈரோடு ஆசிரியை படுகொலையில் குடும்ப உறுப்பினர்களிடம் ரகசிய தகவல் பெறப்பட்டுள்ளது என்று கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கூறினார்.

ஈரோடு

ஈரோடு ஆசிரியை படுகொலையில் குடும்ப உறுப்பினர்களிடம் ரகசிய தகவல் பெறப்பட்டுள்ளது என்று கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கூறினார்.

ஆசிரியை கொலை

ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 62). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (54). ஈரோடு வைராபாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

கடந்த 20-ந் தேதி காலையில் மனோகரன் நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவர் வீடு திரும்பியபோது படுக்கையில் ரத்த வெள்ளத்தில் மனைவி புவனேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் நடைபயிற்சிக்கு சென்ற நேரத்தில் மர்மநபர், புவனேஸ்வரியை கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்து 4 நாட்களாகியும் கொலையாளி யார்? என்று போலீசாரால் உறுதிபடுத்த முடியவில்லை. புவனேஸ்வரிக்கு முன்விரோதம் உடையவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று மனோகரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் பல்ராம் (30) என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பல்ராம் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக உள்ளார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

டி.ஐ.ஜி. விசாரணை

இந்தநிலையில் கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஈரோட்டுக்கு நேற்று வந்தார். அவர் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டார். கொலை எப்போது நடந்தது?, சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், வெளிநபர் நடமாட்டம் இருந்ததா? என்பன உள்பட பல்வேறு சந்தேகங்களை போலீஸ் அதிகாரிகளிடம் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கேட்டு அறிந்தார்.

மேலும் கொலை நடந்த மனோகரனின் வீட்டுக்கும் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் சென்றார். வீட்டில் உள்ள அறைகளையும், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளையும் பார்வையிட்டார்.

அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

4 தனிப்படைகள்

இந்த கொலை வழக்கு சம்பந்தமாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட பணிகளை சரியாக செய்து வருகின்றனர். அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கண்காணித்து வருகிறார். சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து உரிய விசாரணை நடத்தப்படுகிறது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரியின் கணவர், குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி ரகசிய தகவல் பெறப்பட்டு வருகிறது. கொலைக்கான காரணம் தெரிந்துவிட்டால் விரைவில் கொலையாளியை கண்டுபிடித்து விடலாம்.

சம்பவ இடத்தில் கிடைக்கும் தடயத்தின் மூலமாக வழக்குகள் சீக்கிரமாக கண்டறியப்படும். ஒரு சில வழக்குகளில் காலதாமதம் ஏற்படும்.

காரணம்

ஈரோடு ஆசிரியை கொலையில் வீட்டில் இருந்த சுமார் 65 பவுன் நகை அப்படியே இருக்கிறது. அவரது கையில் உள்ள தங்க வளையலும் திருடப்படவில்லை. மேலும், படுக்கையின் மீது இருந்த ரூ.10 ஆயிரமும் திருட்டு போகவில்லை. எனவே பணத்துக்காக கொலை நடந்ததாகவும் தெரியவில்லை. இருந்தாலும், அதுவும் ஒரு காரணமாக இருக்குமா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், கோமதி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story