ஈரோடு-திருநெல்வேலி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கம்
ஈரோடு-திருநெல்வேலி பயணிகள் ரெயில்
காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவரும், தெற்கு ரெயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினருமான கே.என்.பாஷா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் கடந்த 2½ ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர். இந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் ஈரோடு-திருநெல்வேலி பயணிகள் ரெயில் வருகிற ஜூலை மாதம் 11-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி மதியம் 1.35 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் கொடுமுடி, புகளூர், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல்ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக திருநெல்வேலிக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடைகிறது. அதேபோல் காலை 6.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஈரோட்டை வந்தடைகிறது.
இதேபோல் ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரெயிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த ரெயில் ஜூலை மாதம் 29-ந் தேதி முதல் ஈரோட்டில் இருந்து கோவை வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் காலை 7.50 மணிக்கு புறப்படும் ரெயில் தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூர், ஊத்துக்குளி, திருப்பூர், சோமலூர், பீளமேடு வழியாக கோவைக்கு காலை 10.15 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயிலை மீண்டும் பாலக்காடு வரை இயக்க வேண்டும். பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரெயில்களை மீண்டும் இயக்கிய ரெயில்வே துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறிஉள்ளார்.