சேலத்தில் ஈரடுக்கு பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது


சேலத்தில் ஈரடுக்கு பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 19 Jun 2023 7:30 PM GMT (Updated: 20 Jun 2023 6:52 AM GMT)

சேலத்திலின் ஈரடுக்கு பஸ் நிலையத்திலிருங்து போக்குவரத்து தொடங்கியது

சேலம்

சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து தொடங்கியது. இதை மேயர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

ஈரடுக்கு பஸ் நிலையம்

சேலம் பழைய பஸ் நிலையம் ரூ.96½ கோடியில் ஈரடுக்கு பஸ் நிலையமாக மறுசீரமைக்கப்பட்டது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11-ந்தேதி திறந்து வைத்தார். பின்னர் சிறு, சிறு பராமரிப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 16-ந்தேதி முதல் தரைத்தளத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

நேற்று முதல் தளத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் பஸ்கள் போக்குவரத்து முழுமையாக தொடங்கப்பட்டு உள்ளது.

ஈரடுக்கு பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், பஸ் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு குறித்து அவர்கள் கூறியதாவது:-

அடிப்படை வசதிகள்

சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறை வசதி, மின் விளக்கு, சுகாதாரம், பயணிகள் அமருவதற்கான இருக்கை வசதி ஆகியவற்றை பார்வையிட்டோம். தொடர்ந்து தரை தளம், முதல் தளத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பஸ் நிலையத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டு பஸ்கள் குறைவான வேகத்தில் இயக்கப்படுகிறதா?, தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது என்பது குறித்த பெயர் பலகைகள் உள்ளதா? என்பது போன்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

எந்தெந்த ஊர்களுக்கு பஸ்

தரைதளத்தில் இருந்து குருசாமிபாளையம், மகுடஞ்சாவடி, வைகுந்தம், ராசிபுரம், பாரப்பட்டி, மல்லசமுத்திரம், அன்னதானப்பட்டி, மல்லூர், ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், அக்கரைப்பட்டி, பேளூர், கன்னங்குறிச்சி, அடிவாரம் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் தளத்தில் இருந்து இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, ஜலகண்டாபுரம், ஜங்ஷன், தாரமங்கலம், நங்கவள்ளி, வனவாசி, வெள்ளாளப்பட்டி, தின்னப்பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் ரவி, துணை ஆணையாளர் அசோக்குமார், செயற்பொறியாளர் செந்தில்குமார், அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் கணேஷ்குமார் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story