தப்பி ஓடிய கொள்ளையர்கள் கேரளாவில் பதுங்கல்?


தப்பி ஓடிய கொள்ளையர்கள் கேரளாவில் பதுங்கல்?
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே டாஸ்மாக் கடையில் நடந்த கொள்ளை முயற்சியில், தப்பி ஓடிய கொள்ளையர்கள் கேரளாவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே டாஸ்மாக் கடையில் நடந்த கொள்ளை முயற்சியில், தப்பி ஓடிய கொள்ளையர்கள் கேரளாவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையர் மீது துப்பாக்கிச்சூடு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த டாஸ்மாக் மதுக்கடை நேற்று முன்தினம் அதிகாலையில் திறந்து இருந்தது. இதை அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் பார்த்து சந்தேகம் அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கடைக்குள் 3 பேர் நின்றிருந்தனர். அவர்கள் மதுபாட்டில்களை எடுத்து சாக்குப்பையில் நிரப்பி கொண்டு இருந்ததோடு பணப்பெட்டியை உடைத்து திருடிக்கொண்டும் இருந்தனர். இதனால் போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். உடனே 3 பேரும், போலீசாரை கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் மதுபாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீஸ்காரர்கள் அன்பழகன், ஷியாபுதீன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசார், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. மற்றொருவர், தப்பி ஓடினார்.

பணம் மீட்பு

இதையடுத்து படுகாயம் அடைந்த போலீஸ்காரர்கள் மற்றும் கொள்ளையனை போலீசார் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு பிடிபட்ட கொள்ளையனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர், பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே கொட்டாடு பகுதியை சேர்ந்த மணி என்ற சாம்பார் மணி என்பதும், தப்பி ஓடியது அவரது கூட்டாளிகள் ஜிம்பிஜோஸ், குஞ்சுபாவா ஆகியோர் என்பதும் தெரியவந்தது. கொள்ளையனிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் மீட்கப்பட்டது.

தனிப்படை

இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் , கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் வந்த கார், அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அதன்பேரில் அங்கு சென்று அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தடயங்கள் சேகரிப்பு

இதற்கிடையில் நேற்று ஊட்டி கைரேகை நிபுணர் ரமேஷ், தடயவியல் துறை உதவி இயக்குனர் சாரதி மற்றும் அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். அப்போது போலீசார் 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் விட்டு சென்ற காரிலும் சோதனை நடத்தப்பட்டது. இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story