இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கப்படும்

காட்பாடியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
காட்பாடி
காட்பாடியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அங்கன்வாடி மையம்
காட்பாடி தாலுகா பிரம்மபுரம் கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா இன்று நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்து பேசினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் சுஜாதா வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது;
பிரம்மபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் கேட்டார்கள். கட்டி கொடுத்தேன். ரேஷன் கடை கேட்டுள்ளார்கள். ரூ.11 லட்சத்தில் கட்டிடம் கட்ட உத்தரவிட்டுள்ளேன். காட்பாடி தாலுகாவில் பிரம்மபுரம் ஒரு முக்கியமான ஊராட்சி மட்டுமல்ல. பெரிய ஊராட்சியும் ஆகும். இந்த கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி கேட்டார்கள். கட்டிக் கொடுத்துள்ளேன்.
வேண்டியதை நிறைவேற்றி உள்ளேன்
இந்த தொகுதியை பொருத்தவரை எல்லா ஊர்களுக்கும் வேண்டியதை நிறைவேற்றி தந்துள்ளேன்.
1971-ம் ஆண்டு நான் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்த ஊர் சிறிய ஊர். இப்போது பெரிய ஊராட்சியாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் காட்பாடி தொகுதியில் குடிதண்ணீர் பிரச்சினை இருந்தது. ரெயில் எஞ்சின் வந்தால் தான் தண்ணீர் பிடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
அதனை மாற்றி பாலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தேன். இப்போது காவிரி குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கி வருகிறோம்.
காட்பாடி தொகுதியில் பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை சேர்க்காடு கூட்ரோட்டில் கட்டி வருகிறோம். அதற்காக காட்பாடி மக்களை நான் விட்டுவிடவில்லை.
காட்பாடியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை
காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மையம் அருகில் மத்திய அரசின் சார்பில் இ.எஸ்.ஐ மருத்துவமனை விரைவில் அமைக்கப்பட உள்ளது.
அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிள்ளைகள் படிக்க பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். வருகிற சட்டமன்ற கூட்ட தொடரில் தாய்மார்கள் மகிழ்ச்சி அடையும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், பிரம்மபுரம் ஊராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, துணை மேயர் எம்.சுனில்குமார், காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் சரவணன், தாசில்தார் ஜெகதீஸ்வரன், பகுதி செயலாளர் வன்னியராஜா, வர்த்தக அணி ஒன்றிய அமைப்பாளர் டீக்காராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து சேவூர், கார்ணாம்பட்டு ஆகிய கிராமங்களில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் திறப்பு விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.






