இ.எஸ்.ஐ. பெண் தூய்மை பணியாளர் சாவில் திடீர் திருப்பமாக அவரை 2-வது கணவரே கழுத்தை இறுக்கி ெகான்றது அம்பலம்
இ.எஸ்.ஐ. பெண் தூய்மை பணியாளர் சாவில் திடீர் திருப்பமாக அவரை 2-வது கணவரே கழுத்தை இறுக்கி ெகான்றது அம்பலமாகியுள்ளது. முதல்தாரத்து குழந்தைகளிடம் பாசம் காட்டாததால் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை
இ.எஸ்.ஐ. பெண் தூய்மை பணியாளர் சாவில் திடீர் திருப்பமாக அவரை 2-வது கணவரே கழுத்தை இறுக்கி ெகான்றது அம்பலமாகியுள்ளது. முதல்தாரத்து குழந்தைகளிடம் பாசம் காட்டாததால் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூய்மை பணியாளர் சாவு
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம்சக்தி கோவில் வீதியை சேர்ந்தவர் அனிதா (வயது 42). இவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சின்னத்துரை. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் அனிதாவுக்கும், சின்னத்துரைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேருக்கும் குழந்தைகள் உள்ளன. இதையடுத்து சின்னத்துரையும், அனிதாவும் திருமணம் செய்துகொண்டனர்.
தூக்கில் பிணம்
இந்த நிலையில் சின்னத்துரைக்கும், அனிதாவுக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. ஆனால் அனிதா மது குடிப்பது சின்னத்துரைக்கு பிடிக்கவில்லை. மேலும் அனிதா, சின்னத்துரையின் மகள், மகனிடம் பாசம் காட்டாமல், வெறுப்புடன் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தது.
சம்பவத்தன்று அனிதா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக சின்னத்துரை தெரிவித்தார்.
ஆனால் தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக அனிதாவின் மகன் கார்த்திக் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
கழுத்தை இறுக்கி கொன்றது அம்பலம்
இந்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை சம்பவ இடத்திற்கு வந்து அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனையில், அனிதாவை கழுத்தை இறுக்கிக்கொன்று தூக்கில் தொங்கவிடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சின்னத்துரையை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், அனிதா தன்னுடைய முதல்தார குழந்தைகளிடம் பாசம் காட்டாமல் வெறுப்புடன் நடந்து வந்தார். மேலும் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் கொலை செய்ததாகவும், போலீசில் சிக்காமல் இருக்க அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் கைதான சின்னத்துரையை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.