அடிக்கடி ஓய்வெடுக்கும் நகரும் படிக்கட்டு
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) அடிக்கடி ஓடாமல் நிற்கிறது. இதனால் பயணிகள் இதை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இயங்காத படிக்கட்டு
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் பஸ்கள் நுழையும் இடம் மற்றும் பஸ்கள் வெளியேறும் இடத்தில் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த எந்திரம் முறையாக இயங்காமல் உள்ளன.
வாரத்தின் சில நாட்கள் இயங்கியும் பல நாட்கள் ஓடாமலும் இருப்பதால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த எந்திரம் பெரும்பாலான நேரங்களில் காட்சிப்பொருளாக இருப்பது வருத்தம் தரும் விஷயமாக உள்ளது. மேலும் இது செயல்படுமா... இல்லையா? என்ற குழப்பத்தால் பயணிகள் இதை தவிர்த்து விட்டு ரோட்டில் நடந்து செல்கின்றனர்.
முழு நேரம் இயங்குமா?
மத்திய பஸ் நிலையத்தில் பஸ்கள் அடிக்கடி வந்து சென்றவாறு இருப்பதால் பயணிகள் பாதுகாப்பாக ரோட்டை கடப்பதற்கு வசதியாக இந்த எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எந்திரம் ஓய்வெடுப்பது போன்று அடிக்கடி இயங்காமல் இருப்பதால் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் ரோட்டை கடக்கின்றனர். மேலும் டிரைவர்களும் பஸ் நிலையத்திற்குள் அச்சத்துடன் பஸ்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த எந்திரத்தை முழு நேரமும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்வார்களா?.