பள்ளி மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரை போட்டி
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரை போட்டி நடைபெற உள்ளது. இதற்கு பதிவு செய்ய 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
ஊட்டி
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரை போட்டி நடைபெற உள்ளது. இதற்கு பதிவு செய்ய 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
பயிற்சி முகாம்
மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை போட்டியை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த போட்டியை நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்றுள்ளது.
இந்த போட்டி தொடர்பாக மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்(பொறுப்பு) ஜெயகுமார் தலைமை தாங்கினார். இந்த போட்டியை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் கே.ஜே.ராஜூ அறிமுகப்படுத்தி பேசினார்.
ஆய்வு கட்டுரை
அப்போது அவர் கூறுகையில், நீலகிரியில் அன்னிய தாவரங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு மாணவர்களின் ஆய்வு கட்டுரையும் ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த போட்டியில் 2 மாணவர்கள் ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் 3 மாதங்களுக்கு தாங்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் ஏதாவது ஒரு சுற்றுச்சூழல் பாதிப்பால் மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் பிரச்சினையை ஆய்வு செய்து, அதற்கு தீர்வு வழங்க வேண்டும். சிறந்த ஆய்வுகளை செய்யும் மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டு என்றார்.
காலநிலை மாற்றம்
இதைத்தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கானுயிர் துறையின் தலைவர் ராமகிருஷ்ணன், நீலகிரி மாவட்டத்தின் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் பற்றி விளக்கினார். நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப்படை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், மூலிகைகளும்-மக்கள் ஆரோக்கியமும் என்ற தலைப்பிலும், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் மனோகரன் ஒரு லட்சிய ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும், விஞ்ஞானி ஜனார்த்தனன் காலநிலை மாற்றம் குறித்தும் பேசினர். இதில் 10 வயது முதல் 17 வயது வரை உள்ள பள்ளி செல்லும் மாணவர்கள் மட்டுமல்லாமல் பள்ளி செல்லாத குழந்தைகளும் பங்கேற்கலாம். இதற்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். இதில் அறிவியல் இயக்க செயலர் சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.