பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
பழனி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி 11-ந்தேதி நடக்கிறது.
பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் கூறியதாவது:-
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு 4 தலைப்புகளில் கட்டுரை போட்டி நடத்தப்பட உள்ளது. அதாவது 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'கலைஞர் கல்விக்கு ஆற்றிய பணிகள்', 'கலைஞரின் சமூக நலத்திட்டம்' ஆகிய தலைப்பிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'கலைஞர் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டு', 'கலைஞரின் பார்வையில் பெண்களின் முன்னேற்றம்' ஆகிய தலைப்புகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகிறது. வருகிற 11-ந் தேதி காலை 10 மணிக்கு அருங்காட்சிய வளாகத்தில் கட்டுரை போட்டி நடைபெறுகிறது. போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் தங்களது பள்ளிகளின் மூலமாக பெயர்களை வருகிற 9-ந்தேதிக்குள் அனுப்பி பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 10 மாணவர்கள் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும், வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.