பேராசிரியர் இறந்த பின்பும், அவரின் குடும்பத்தினருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காதது ஏன்? -மதுரை ஐகோர்ட்டு கேள்வி


பேராசிரியர் இறந்த பின்பும், அவரின் குடும்பத்தினருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காதது ஏன்? -மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 16 Jun 2023 2:05 AM IST (Updated: 16 Jun 2023 6:34 AM IST)
t-max-icont-min-icon

பேராசிரியர் இறந்த பின்பும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் இழுத்தடிப்பது ஏன் என்று அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை


பேராசிரியர் இறந்தபின்பும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் இழுத்தடிப்பது ஏன் என்று அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

ஓய்வூதியம் கேட்டு வழக்கு

மதுரை ஐகோர்ட்டில் கோவிந்தன் என்பவர் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி 2006-ம் ஆண்டில் ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்கு சேர வேண்டிய பணப்பலன்களை கேட்டு கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். அதை விசாரித்த கோர்ட்டு, எனக்கு உரிய பணப்பலன்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு செய்ததை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததுடன், பணப்பலன்களை வழங்கும்படியும் உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பணப்பலன்களை வழங்காத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மனுதாரர் இறப்பு

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது மனுதாரர் கோவிந்தன் இறந்துவிட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மனுதாரர் இறந்தபின்பும், அவருக்கான பணப்பலன்கள் அவருடைய குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. பணப்பலன்களை பெற இத்தனை வருடங்கள் காத்திருப்பதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்படும் பதில்கள் ஏற்புடையதாக இல்லை. இரக்கமற்ற அதிகாரிகளிடம் மனுதாரருடைய குடும்பத்தினர் கருணையை எதிர்பார்க்க முடியாது.

பதிலளிக்க உத்தரவு

எனவே இந்த விவகாரத்தில் காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் மீது ஏன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story