கவர்னர் ஒப்புக்கொள்ளா விட்டாலும் தமிழகம் அமைதிப்பூங்காதான் -தமிழக அரசு பதில்


கவர்னர் ஒப்புக்கொள்ளா விட்டாலும் தமிழகம் அமைதிப்பூங்காதான் -தமிழக அரசு பதில்
x

17 மசோதாக்களை நிறுத்தி வைத்து இருக்கிறார், ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளா விட்டாலும் தமிழகம் அமைதிப்பூங்காதான் என்று கவர்னரின் விமர்சனத்துக்கு தமிழக அரசு பதில் அளித்து உள்ளது.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை தெரிவித்திருந்தார்.

சட்டத்துக்கு புறம்பான விளக்கம்

கவர்னருக்கு பதில் அளித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். திராவிடத்துக்குத் தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார். சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார்? என்ற வரலாற்றை மறைக்கிறார். தனக்குத் தோன்றும் புதிய மற்றும் புனைவு காரணங்களை ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களிடம் சட்டத்துக்குப் புறம்பான விளக்கங்கள் சொல்கிறார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதையே பேசுகிறார்.

மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் உள்ளதை மறந்துவிட்டு பேசுகிறார். தான் மேற்கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறி பொதுவெளியில் நிர்வாக விவரங்களைச் சொல்லி வருகிறார். இப்படி கவர்னர் பதவிக்கு அழகில்லாத, அடிப்படையில்லாத செயல்களை மட்டுமே செய்து வருகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.

தனிப்பட்ட ரவியாக இருந்தால் அதை மதிக்கத் தேவையில்லை. ஆனால் தமிழ்நாட்டின் கவர்னராக இருப்பதால் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

கண்டனத்துக்கு உரியவர்

இங்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது முதல், அவர் சொல்லி வரும் அபத்தமான கருத்துகளுக்கும் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறது தி.மு.க.

காரணம், அந்த அடிப்படையற்ற கருத்துகள் மறுக்கப்படாவிட்டால் அவை சரியானதோ என சிலர் தவறாக நினைத்துவிடக் கூடும். தமிழ்நாட்டின் ஜனநாயகச் சக்திகளின் கடுமையான கண்டனத்துக்குரியவராக அவர் இருந்து வருகிறார்.

40-க்கும் மேற்பட்டோரின் மரணத்துக்குக் காரணமான ஆன்லைன் ரம்மி தடை மசோதாவைக்கூட பல மாதங்கள் தனது நாற்காலிக்கு கீழே போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். தமிழக சட்டமன்றத்தில் இவரது நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய அன்றுதான் உடனடியாக கையெழுத்து போட்டு அனுப்பினார். இதன் மூலம், இவர் எத்தகைய மனிதர் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள்.

இப்படி தடித்த தோலுடன் இருக்கக் கூடிய கவர்னர் ஆங்கில நாளேட்டுக்கு ஒரு பேட்டியை அளித்துள்ளார். அந்த பேட்டியை முழுமையாகப் படிக்கும்போது, அவர் கவர்னர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது. கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ்பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார் என்பதைத்தான் அந்தப் பேட்டி காட்டுகிறது.

வேறு வேலையை பார்க்க வேண்டும்

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் சட்டமன்றம் கூடும்போது கவர்னர் உரை இடம் பெறுவது என்பது மரபு. அந்த உரையை தயாரித்து வழங்குவது மாநில அரசின் பணி. அதை வாசிக்க வேண்டியதுதான் கவர்னரின் வேலை. அப்படி மாநில அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையை வாசிக்காமல், திரித்தும், மாற்றியும், விட்டுவிட்டும், புதிதாக சேர்த்தும் கவர்னர் வாசித்தார். இது அவை மீறல் ஆகும். ஜனநாயக மீறல் ஆகும்.

எனவேதான், 'அரசால் அளிக்கப்பட்ட உரையே இடம்பெறும்' என்ற தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வந்து அனைவரது ஆதரவுடன் நிறைவேற்றினார். இதில் என்ன தவறு இருக்க முடியும்? கவர்னரால் அவமானப்படுத்தப்பட்ட அவை மாண்பு, முதல்-அமைச்சரின் தீர்மானத்தால் அன்றைய தினமே சரிசெய்யப்பட்டது.

அவர்கள் எழுதித் தந்ததில் உடன்பாடு இல்லை என்கிறார் கவர்னர். எழுதித் தந்ததைப் படிக்க வேண்டும் என்பதுதான் விதி, அதுதான் நடைமுறை. அது அவருக்கு விருப்பம் இல்லை என்றால், அவர் உரையாற்றவே வந்திருக்கக் கூடாது.

கவர்னர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்ட பதவி அல்ல. அந்தப் பதவிக்கு வந்தவர், அதன் தன்மையோடுதான் நடந்து கொள்ள வேண்டும். தனி ஆவர்த்தனம் காட்ட முனையக் கூடாது. எழுதி வழங்கியதை வாசிக்க வேண்டும், விருப்பம் இல்லாவிட்டால் அவர் வேறு வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவையின் மாண்பைக் குலைக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

குஜராத்தில்...

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கோத்ரா ரெயில் எரிப்பும், அதன் பிறகு கலவரங்களும் நடந்தபோது, அந்த மாநில கவர்னர் குஜராத் அமைதியில்லா மாநிலம் என்று உரையாற்றினாரா? அல்லது குஜராத் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அப்படியே ஆற்றினாரா? என்பதை கவர்னர் கூற வேண்டும். அவை தொடங்கும்போது தேசிய கீதம் பாடவில்லை என்று 'தேசபக்த திலகம்' போல பேட்டி அளிக்கும் கவர்னர், கடந்த 9.1.2023 அன்று தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் அவையை விட்டு வெளியேறியது ஏன்? இதுதான் அவரது தேசபக்தியா?

23.10.2022 அன்று கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மாநிலம் தாண்டிய பரிமாணங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்பு இருந்ததால் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு உடனே மாற்ற முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

மாநில அரசின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் மத்திய முகமை தனது விசாரணையைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுவிட்டார்கள்.

அமைதிப் பூங்காதான்

கனியாமூர் பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறையை சில மணி நேரங்களுக்குள் காவல் துறை கட்டுப்படுத்தியது. துப்பாக்கிச் சூடு இல்லாமல் கட்டுப்படுத்தினோம் என்பதுதான் அதில் முக்கியமானது. அரசு எடுத்த நடவடிக்கைகளை எல்லாம் மறைத்துவிட்டு, ஒரு எதிரிக்கட்சி அரசியல் தலைவரைப் போல எதற்காக கவர்னர் வரிசைப்படுத்துகிறார்? மாநில அரசின் அங்கமாக இருக்கும் ஒருவர், மாநில அரசையே தவறாகக் குற்றம் சொல்வது எப்படி சரியானதாக - முறையானதாக இருக்க முடியும்?

கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளா விட்டாலும் தமிழ்நாடு அமைதிப் பூங்காதான். அது இந்த மாநிலத்தின் வளர்ச்சியில் எதிரொலிக்கிறது. ஆனால் அவரது உரைகள், இந்த அமைதியைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளன என்பதுதான் உண்மை.

17 மசோதாக்கள் நிலுவை

கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் அமர்ந்து விவாதித்து அனுப்பி வைக்கும் சட்டமசோதாக்களுக்கு, சட்டத்திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டியது கவர்னரின் கடமையாகும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். அதுகுறித்து விவாதிக்க மாநில அரசு திறந்த மனத்தோடு தயாராக இருக்கிறது. அதே சட்டத்தை நாங்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், அதற்கு கவர்னர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும்.

ஆனால் அதற்கும் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைக்கிறார். இதுதான் கடுமையான கண்டனத்துக்குரியது. அவர் பார்த்தாக வேண்டிய அந்த ஒரு வேலையையும் பார்க்க மறுக்கிறார் என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு. இவரது இந்தச் செயல் மாநில நிர்வாகத்தை இயன்றவரை முடக்கி வைக்கும் முயற்சிதானே.

தமிழ்நாடு அரசு எத்தனை மசோதாக்களை தனக்கு அனுப்பி வைத்துள்ளது? அவற்றில் எத்தனை தன்னிடம் நிலுவையில் உள்ளது? என்ற கேள்விக்கு, ''தன்னிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை'' என்ற பொய்யான தகவலை பேட்டியில் தெரிவித்து, பின்னர் அவரே 8 மசோதாக்களைத்தான் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறி இருக்கிறார்.

நிலுவையில் இருப்பதற்கும், நிறுத்தி வைத்திருப்பதற்கும் உள்ள சட்ட வித்தியாசத்தை அவர்தான் விளக்க வேண்டும். இன்றைய நிலவரப்படி, கடந்த சட்டமன்ற கூடத்தொடரின்போது நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களில் ஏழும், அதற்கு முன்பு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் என மொத்தம் அவரிடம் 17 மசோதாக்கள் உள்ளன. நிர்வாகத்தைப் பொறுத்தவரை, அவர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் அவ்வளவுதான். வெறும் வார்த்தை ஜாலங்களில் அவர் அதை மூடி கடந்திட கூடாது. அதை இந்த அரசு அனுமதிக்காது.

மாநிலக் கல்வி

இப்படி எளிதில் சரிபார்க்கக்கூடிய ஒரு விவரத்தையே தவறாகக் கூறும் கவர்னரின் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகநீதி குறித்த கருத்துக்களை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் உயர்கல்வி குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கும் இவருக்கு தெரியுமா, உலகின் மிகச் சிறந்த தொழில் நிறுவனங்கள் நமது மாநிலத்தை நாடி வரும் காரணம்?

இங்குள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் நம் மாணவர்களைச் சிறப்பான பொறியாளர்களாக, திறமையான நிர்வாகிகளாக சமூகத்திற்கு வழங்கி வருகின்றன என்பதுதான் உண்மை.

கடந்த ஆண்டு, ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தேசிய கல்வி நிறுவன தர வரிசைக் கட்டமைப்பு தகவலின்படி, மாநிலக் கல்லூரி 3-வது இடமும், லயோலா கல்லூரி 4-வது இடமும் பெற்றுள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி அந்தப் பட்டியலை எடுத்து முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் எத்தனை இருக்கின்றன என்பதை பொறுமையாக எண்ணிப் பார்த்து கணக்குச் சொல்லட்டும்.

அதுமட்டுமல்ல, இந்த அரசின் உன்னதமான புதுமைப்பெண் திட்டத்தின் காரணமாக, உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை 26 சதவீதம் உயர்ந்துள்ளது. அவரது சனாதனத்திற்கு எதிரானது என்பதால் நமது மாநில கல்வியை குறை கூறி மகிழ்கிறார் போலும்.

விருப்புரிமை தொகை

மேலும் கவர்னர் தனது பேட்டியில், கவர்னரின் விருப்புரிமைத் தொகை சரியாகப் பயன்படுத்தபடாதது குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்துள்ளார். நிதித்துறை அமைச்சர், இந்த விருப்புரிமைத் தொகை, வழங்கப்படும் அதே நிதியாண்டில் பயன்படுத்தாவிட்டால் அந்த தொகை காலாவதி ஆகிவிடும். ஆனால் கவர்னரின் அலுவலகம் இந்த தொகையை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் வேறு வங்கி கணக்கிற்கு மாற்றி அதை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த வங்கி கணக்குகள் தணிக்கை ஆளுகைக்கு உட்படாததால் இந்த நடைமுறை மிகவும் தவறானது என்று கணக்கு தணிக்கையாளர் பலமுறை பல இனங்களில் எடுத்து கூறி உள்ளார். மேலும் இது தமிழ்நாடு நிதிக்கான விதிகள் மற்றும் அனைத்து நிதி மேலாண்மை நடைமுறைகளுக்கும் மாறானது;

தமிழ்நாடு நிதிக்கான விதிகள்படி இந்த விருப்புரிமைத் தொகை, பொதுப்பணியில் ஈடுபட்டுள்ள சேவை நிறுவனங்களுக்கும், அரசு நிதியிலிருந்து உதவிபெற தகுதியான நபர்களுக்கு உதவி வழங்கத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த விருப்பத் தொகை விதிமுறைகளுக்கு மாறாக பலமுறை தொடர் செலவினங்கள் உள்ள இனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும், தகுதி இல்லாத தனி நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது;

பல ஆண்டுகளாக ரூ.10 லட்சத்துக்கு குறைவாக இருந்த கவர்னரின் விருப்புரிமைத் தொகை, 2019-ம் ஆண்டில் ரூ.5 கோடியாக முந்தைய அரசால் உயர்த்தப்பட்டது. இந்த விருப்பத்தொகை, தமிழ்நாடு நிதிக்கான விதி 213 (1) -ன் கீழ் வழங்கப்படுகிறது. இந்த தொகையை ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டபோது, சிறு செலவினங்களுக்கு (சிறிய மானியங்களுக்கு) பயன்படுத்தப்படும் என்ற அடிப்படையில்தான் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் 2000-ம் ஆண்டில், சிறிய செலவு என்ற வார்த்தை நீக்கப்பட்டது என்று கவர்னர் கூறுவது, 2019-ம் ஆண்டு உயர்வுக்குப் பின் பொருந்தாது என்று அமைச்சர் கூறினார்.

ஏன் கேட்கவில்லை?

மேற்கூறிய குற்றச்சாட்டுகளில் முதல் இரண்டிற்கு கவர்னர் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமோ, பதிலோ அளிக்கப்படவில்லை. 3-வது குற்றச்சாட்டிற்கு மட்டும் ஒரு பொருந்தாத விளக்கத்தை அளித்துள்ளார். தரவுகள் அடிப்படையில் நிதித்துறை அமைச்சரால் சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட இந்த குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு கவர்னர் அலுவலகம் உரிய விளக்கம் வழங்காமல், பொதுவாக நிதியமைச்சர் கூறியதை உண்மைக்கு புறம்பானது என்று சொல்வது சரியல்ல. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம்.

இவ்வளவு கேள்விகளைக் கேட்ட ஊடகவியலாளர், 'ஆன்லைன் சூதாட்ட கம்பெனி உரிமையாளர்கள் உங்களைச் சந்தித்தார்களா?' என்று ஏன் கேட்கவில்லை? அல்லது அதை கவர்னர் கேட்கக் கூடாது என்றாரா? கவர்னர் ஆர்.என். ரவியை புரிந்து கொள்ள இந்த ஒரு வரியே போதும். அவரைப் போல ஒரு பக்கம் பதிலளிக்கத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story