ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் ''மதி வார சந்தை'' - சென்னையில் நடக்கிறது


ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மதி வார சந்தை - சென்னையில் நடக்கிறது
x

மகளிர் சுய உதவிக்குழுக்களின் மதி வார சந்தை ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடக்கிறது.

சென்னை

தமிழ்நாடு முழுவதும் உள்ள 7 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு மாதத்துக்கு 2 நாட்கள் அவர்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ஏதுவாக, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஏற்பாடு செய்து கொடுக்கிறது.

தற்போது அந்த சந்தையை ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு "மதி வார சந்தை" என்று பெயரும் சூட்டப்பட்டு இருக்கிறது. அதன்படி, நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறுதானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள், எண்ணெய் வகைகள், தின்பண்டங்கள், ஊறுகாய் வகைகள், துணிப்பை மற்றும் சணல் பைகள் என அவர்கள் தயாரித்த, விளைவித்த பொருட்களை விற்பனை செய்தனர்.

காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சந்தை இங்கு செயல்பட இருக்கிறது. கிராமப்புறங்களில் ஒவ்வொரு வாரமும் செயல்படும் கிராம சந்தைகள் போலவே, இந்த மதி வார சந்தையும் உள்ளது. இந்த வாரம் நடைபெறும் சந்தையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்றன. இப்படியாக ஒவ்வொரு வாரம் சில மாவட்டங்களின் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் சுழற்சி முறையில் கலந்து கொண்டு தாங்கள் தயாரித்த, விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய இருக்கின்றனர்.

நேற்று நடந்த சந்தையை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி, கூடுதல் இயக்குனர் முத்துமீனாள், பொது மேலாளர் ஜீவா ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது தமிழ்நாடு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க செயலாளர் செந்தில்குமார் உடன் இருந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) வார சந்தை நடைபெற உள்ளது.


Next Story