ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்கு விவரம் வீடுதோறும் வழங்கப்படுகிறது-ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன் பெருமிதம்
வாராப்பூர் ஊராட்சியில் வெளிப்படையான நிர்வாகம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்கு குறித்த விவரம் வீடுதோறும் வழங்கப்படுகிறது என்று ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் பெருமிதத்துடன் கூறினார்.
எஸ்.புதூர்,
வாராப்பூர் ஊராட்சியில் வெளிப்படையான நிர்வாகம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்கு குறித்த விவரம் வீடுதோறும் வழங்கப்படுகிறது என்று ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் பெருமிதத்துடன் கூறினார்.
ஊழலற்ற ஊராட்சி
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கட்டுமான பொறியாளர்கள் கூட்டமைப்பின் மக்கள் செய்தி தொடர்பாளராக இருப்பவர் வி.என்.ஆர். நாகராஜன். இவருடைய மனைவி மலர்விழி நாகராஜன் முதுகலை பட்டம் படித்தவர். இவர் தனது சொந்த ஊரான வாராப்பூர் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மக்கள் பணி குறித்து ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன் கூறியதாவது:-
தேர்தல் சமயத்தில் நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இன்றளவும் அரசு பணியை செய்திட ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஊராட்சி வரவு- செலவு கணக்குகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஊராட்சி வரவு- செலவு பேனர் வைக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் வரவு- செலவு குறித்த கணக்கு நோட்டீஸ் வழங்கி வருகின்றேன்.
அடிப்படை வசதிகள்
வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் என்னுடைய முயற்சியின் மூலம் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ.1 கோடியே 30 லட்சத்தில் குடிநீர், கழிப்பறை, நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறை அமைக்க ஏற்பாடு செய்து உள்ளது.
வாராப்பூர், குறும்பலூர், கட்டையன்பட்டி, கட்டையன்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் புதிய போர்வெல் மூலம் அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி பைப் லைன்கள் அமைத்து கொடுத்துள்ளேன். மேலும் குறும்பலூர் கிராமத்திற்கு புதிய மயான சாலை, பகுதி நேர ரேஷன் கடை, புதிய குடிநீர் தொட்டி, தெருவிளக்குகள்,. கட்டையன்பட்டி கிராமத்தில் நாடக மேடை முன்பாக பேவர் பிளாக், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தும், புதிய குடிநீர் பைப் லைன், புதிய தெருவிளக்குகள், கான்கிரீட் ரோடு, அம்மன் கோவில் முன்பாக பேவர் பிளாக் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனையை அதிகாரிகள் உதவியுடன் மனையிடமாக பிரித்து வழங்கியுள்ளேன். வாராப்பூர் கிராமத்தில் சீரணி அரங்கம், சமுதாய கூடம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை மராமத்து பணிகள் செய்து கொடுத்துள்ளேன். புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து குறைந்த மின் அழுத்த குறையை போக்கியுள்ளேன். பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் புதிய பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடம் அமைத்து கொடுத்துள்ளேன்.
சுகாதாரமான ஊராட்சி
ஊராட்சி முழுவதும் உள்ள வீடுகளில் தனி நபர் இல்ல கழிப்பறை, கழிவுநீர் உறிஞ்சுக்குழி, பொது இடங்களில் குளியல் தொட்டிகள் அமைத்தும், பொது மருத்துவ முகாம், கண் மருத்துவ முகாம் அமைத்து கொடுத்தும் சுகாதாரமான ஊராட்சியாக மாற்றி வருகிறேன். மேலும் ஊராட்சி தலைவர் வாங்கும் சம்பளம் அனைத்தையும் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறேன். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தனது கணவருடன் சேர்ந்து இலவச அரிசி, உடைகள் என பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றேன். மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ஊராட்சியில் முன்னுரிமை அளித்து நலத்திட்டங்களை பெற்று தருகிறேன். ஊராட்சியில் உள்ள பொதுமக்களை வாட்ஸ்அப் குழு மூலம் இணைத்து, அதில் வரும் குறைகளை கண்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.